மேற்கூரை சோலார் திட்டத்திற்கு இந்திய அரசு ஒப்புதல்
2024-03-01 17:26:06

இந்தியா முழுவதும் 1 கோடி வீடுகளில் மேற்கூரை சோலார் பேனல்களை நிறுவும் திட்டத்திற்கு, இந்திய அரசு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மாதத்திற்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற முடியும்.

இத்திட்டத்தின் மூலம், குடும்பங்கள் மின் கட்டணத்தைச் சிக்கனப்படுத்த முடியும் என்றும், உபரி மின்சாரத்தை மின்சார விநியோக நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும் என்றும் ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கூற்றுப்படி இத்திட்டத்தின் மூலம், உற்பத்தி, தளவாடங்கள், விநியோகச் சங்கிலி, விற்பனை, நிறுவல், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு மற்றும் பிற சேவைத்துறைகளில் சுமார் 17 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி 22ஆம் நாள் இந்தியப் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், இந்தியாவில் உள்ள வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.