சி.பி.பி.சி.சி. 2024ஆம் ஆண்டுக்கூட்டத்தொடர் இன்று துவக்கம்
2024-03-04 16:41:23


சி.பி.பி.சி.சி. என பொதுவாக அறியப்படும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 2ஆவது கூட்டத் தொடர் 4ஆம் நாள் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது. ஷிச்சின்பிங் உள்ளிட்ட நாட்டுத் தலைவர்கள் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த தேசிய கமிட்டியின் தலைவர் வாங் ஹுநிங், தேசிய கமிட்டியின் நிலைக் குழுவின் சார்பில் பணியறிக்கை வழங்கினார். இதில், கடந்த ஆண்டு மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் பணிகளைத் தொகுத்து மீளாய்வு செய்யப்பட்டதோடு, இவ்வாண்டிற்கான பணிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்போது வாங் ஹுநிங் கூறுகையில்

2024ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75ஆவது நிறைவு ஆண்டாகவும் 14ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றுவதற்கான முக்கிய ஆண்டாகவும் திகழ்கிறது. தவிரவும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு உருவாக்கப்பட்தன் 75ஆவது ஆண்டு நிறைவாகவும் உள்ளது. இவ்வாண்டில், சீன நவீனமயமாக்கத்தை முன்னெடுப்பது குறித்த பொறுப்புகளை நிறைவேற்றி,  ஆலோசனைகளை வழங்க முனைப்புடன் செயல்பட்டு, பரந்த அளவில் ஒருமித்த கருத்துக்களை உருவாக்கி, முழு ஆண்டின் பொருளாதாரச் சமூக வளர்ச்சி இலக்குகளை நனவாக்குவதற்காக சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு பணியாற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

6 நாட்கள் நீடிக்கும் கூட்டத் தொடரில், 34 துறைகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், நாட்டின் அரசியல், பொருளாதாரம், சமூகம், வாழ்வாதாரம்  உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் முக்கிய தீர்மானங்கள் குறித்து கலந்தாய்வு மற்றும் விவாதம் நடத்துவர்.