வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வெங்காயம் ஏற்றுமதி – இந்தியா அனுமதி
2024-03-05 19:35:36

இந்தியாவிலிருந்து வங்கதேசம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக வணிக அமைச்சகம் திங்கள் அன்று தெரிவித்தது.

அந்நாடுகளின் கோரிக்கையைத் தொடர்ந்து, வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையில் திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வங்கதேசத்துக்கு 50 ஆயிரம் டன் வெங்காயமும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 14 ஆயிரத்து 400 டன் வெங்காயமும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதம், கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் வெங்காய ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்தது. இத்தடை மார்ச் இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.