ஈரானில் உள்ள அணு ஆற்றல் வசதிகள் தாக்குதலால் பாதிக்கப்படவில்லை: ஐ.ஏ.யீ.ஏ
2024-04-19 19:48:50

ஈரானில் உள்ள அணு ஆற்றல் வசதிகள் சீர்குலையவில்லை என்றும், தொடர்புடைய நிலைமையை உற்றுக் கண்காணித்து வருவதாகவும், சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் 19ஆம் நாள் சமூக ஊடகம் மூலம் தெரிவித்தது.

மேலும், பல்வேறு தரப்புகள் இயன்ற அளவில் கட்டுபாட்டுடன் செயல்படுமாறு வேண்டுகோள் விடுத்த இந்நிறுவனத்தின் பொது செயலாளர் க்ரோசி, இராணுவ மோதலின்போது அணு வசதிகளைக் குறிவைக்கக் கூடாது என்று மீண்டும் வலியுறுத்தினார்.

ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள இஸ்ஃபஹான் மாநிலத்தில் 19ஆம் நாள் வெடி குண்டு தாக்குதல் நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து, ஈரான் தேசிய தொலைகாட்சி நிலையம் வெளியிட்ட செய்தியின்படி, இம்மாநிலத்தில் வான் எதிர்ப்பு அமைப்புமுறை மூலம் மூன்று சிறிய ஆள் இல்லாத விமானங்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன. மாநிலத்தில் உள்ள அணு ஆற்றல் வசதிகள் தற்போது பாதுகாப்பாக இருக்கின்றன.

இதனிடையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தியது தாங்கள் தான் என இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்ததாக இஸ்ரேல் தரைப்படை வானொலி தெரிவித்துள்ளது.