சீன ஊடகக் குழுமத்துக்கு இலங்கை தலைமையமைச்சர் அளித்த பேட்டி
2024-04-20 17:10:01

சீனாவில் பயணம் மேற்கொண்ட இலங்கை தலைமையமைச்சர் தினேஷ் குணவர்தன அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார். இப்பயணம் குறித்து அவர் கூறுகையில், இலங்கையைப் பொறுத்தவரை, இது ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் வெற்றிகரமான பயணமாகும். இலங்கை-சீனத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 60க்கும் மேலான ஆண்டுகளாக, இரு நாடுகளும், பல்வேறு துறைகளில் நெருங்கிய கூட்டாளிகளாகும். இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவும் ஒத்துழைப்பும் தொடர்ச்சியாக முன்னேறும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்குடனான சந்திப்பின் மூலம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தரக் கட்டுமானம் குறித்து அவர் கூறுகையில், கொழும்பு துறைமுகம், தெற்காசிய பிரதேசத்தில் மிக அதிகமான போட்டியாற்றல் கொண்ட துறைமுகங்களில் ஒன்றாகும். இது ஒரு பெரும் முன்னேற்றமாகும். சீனப் பொருளாதாரத்தின் வலிமையான வளர்ச்சி, முழு ஆசிய பிரதேசத்துக்கும் செல்வாக்கு மிக்கது. சீனாவின் ஆதரவுடன், மேலும் நல்ல வாய்ப்புகள் மற்றும் சந்தை கிடைக்கும் என்று ஆசிய நாடுகள் கருதுவதாக தெரிவித்தார்.

மேலும், இலங்கை சீனாவுக்கு மதிப்பு அளித்து, சீனாவின் மீது நம்பிக்கை கொண்டு வருகிறது. சீனாவின் ஆதரவு, இலங்கையின் வளர்ச்சிக்கு இயக்காற்றலை வழங்கி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.