ஷிச்சின்பிங்குடன் சந்திப்பு: சீனாவுக்கு என்ன வேண்டும் பற்றி அவருக்கு தெரிகிறது
2024-04-22 15:57:21

ரஷிய-சீன நட்புறவு சங்கத்தின் முதல் துணைத் தலைவர் கலினா வினியாமினோவ்னா குலிகோவா, சீனாவின் நட்புறவுப் பதக்கம் பெற்றவர்களில் ஒருவர்.

பதக்கம் பெற்றது பற்றி குலிகோவா கூறுகையில்,

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு நாளில், வெளிநாட்டவர்கள் சிலருக்கு சீனாவின் மிக உயர்ந்த கௌரவமான ‘நட்புறவுப் பதக்கம்’ வழங்கப்படவுள்ளது என்பதை ஒரு மாதத்திற்கு முன்பாகவே, ரஷியாவுக்கான சீனத் தூதரகத்தின் வழி அறிந்து கொண்டேன். இது எனக்குப் பெருமை. அந்த மாதத்தில் மிகுந்த உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் இருந்தேன்.

குறிப்பாக, சீன மக்கள் குடியரசு நாட்டுப்பண் இசைக்கப்பட்ட பிறகு, சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் நிகழ்த்திய உரையே இப்போது வரை என் மனதில் பதிந்திருக்கிறது என்று குலிகோவா தெரிவித்தார்.

இன்று, நாம் அனைவரும் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்குரிய சிறப்புமிகு விழாவில் ஒன்று கூடியுள்ளோம். இந்நாளில் சீனாவின் கட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ள சிறந்த நபர்களுக்கும் வெளிநாடுகளுடனான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் தலைசிறந்த பங்களிப்பைச் செய்துள்ள வெளிநாட்டு நண்பர்களுக்கும் மிக உயரிய கௌரவமான விருதை வழங்குகிறோம் என்று ஷிச்சின்பிங் தனது உரையில் தெரிவித்தார்.

இவ்வுரை பற்றி குலிகோவா கூறுகையில்,

ஷிச்சின்பிங்கின் அந்த உரை சிறியதாக இருந்தாலும் கருத்துத் தெளிவுடனும் செறிவுடனும் இருந்தது. அவர் நம்பிக்கையுடன் சிறப்புரை ஆற்றினார். தான் ஒரு மாபெரும் நாட்டினைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்பதாக அவர் உறுதியாக நம்பினார் என்று குறிப்பிட்டார்.

குலிகோவா மேலும் கூறுகையில், ஷிச்சின்பிங் 2012ஆம் ஆண்டில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், ஒரு இலக்கை அறிவித்தார். உலகின் வல்லரசு நாடுகளின் வரிசையில் சீனாவைச் சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.  எனவே, நான் சீனாவைப் பற்றி கூறும்போது, முதலில் சீன தலைவர் ஷிச்சின்பிங்கே நினைவுக்கு வருகின்றார். அவர், மக்களால் நன்கு மதிக்கப்பட்ட தலைவர் ஆவர். மக்களில் இருந்து மக்களுக்காக வந்த அவர், எப்போதும் சீன மக்களுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார். சீனாவுக்கு என்ன வேண்டும், சீனாவை எங்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதை நன்றாகப் புரிந்து வைத்துள்ளார். அதோடு, அப்பணிக்கான கொள்கைகளை எப்படி வகுத்து செயல்படுவது என்பதிலும் தேர்ச்சி பெற்று விளங்குகின்றார். மேற்கூறிய அனைத்தும் அவரைப் பற்றி என் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.