அழகுப்பொருட்கள் தயாரிப்பு நகர் விரைவான வளர்ச்சி
2024-04-26 15:27:38

 படம்: CFP

சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தின் தைசி என்னும் நகரில் ‘மேய்ஜுவாங்சியோசென்’அல்லது பியூட்டிவில்லே(Beautéville) என அழைக்கப்படும் சிறிய நகர் அமைந்துள்ளது. அழகுக்கலை மற்றும் ஒப்பனை பொருட்கள் தயாரிப்பு, பண்பாடு, சுற்றுலா, குடியிருப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்து இந்த நகர் விரைவாக வளர்ந்து வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, சுரங்கத் தொழிலானது தைசி நகருக்கு  முக்கிய வருமானம் தரும் தொழிலாக இருந்தது. ஆனால் அத்தொழிலானது சுற்றுச்சூழலுக்கு குறிப்பிட்ட அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து 2000ஆம் ஆண்டு முதல், பசுமை வளர்ச்சி வழிமுறையை ஆய்வு செய்ததன் அடிப்படையில், சுரங்கங்கள் படிப்படியாக மூடப்பட்டு, சுற்றுச்சூழல் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.  பின்னர், சாதகமான அமைவிடம், தரமான நீர் வளம் மற்றும் நல்ல சுற்றுச்சூழல் ஆகிய காரணிகளைக் கருத்தில் கொண்டு, சில ஒப்பனை நிறுவனங்கள் தைசி நகரில் தொழிற்சாலைகளைக் கட்டியமைக்க தொடங்கின. இது, உள்ளூரின் ஒப்பனைத் தொழிலின் வளர்ச்சிக்கு நல்ல அடித்தளத்தை உருவாக்கியதனால், மேலதிக ஒப்பனை நிறுவனங்கள் இங்கு வந்தன. இதனால், தைசியானது அழகுப் பொருட்கள் தயாரிப்பு நகர் என்னும் புகழைப் பெற்றது. இவ்வாண்டின் மார்ச் மாதம் வரை, இந்த நகரில் மொத்தம் 281 நிறுவனங்கள், ஒப்பனைப் பொருட்கள் தயாரிப்பிலும் தொடர்புடைய தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றன. 2023ஆம் ஆண்டில், இந்நகரின் ஒப்பனைப் பொருட்களின் ஏற்றுமதி 163 சதவீதம் வளர்ச்சியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, தொழில்நுட்பம், புதிய தயாரிப்புகள் ஆகியவற்றின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியை இந்த நகர் தீவிரமாக்கி வருகின்றது.  ஃபேஷன் மற்றும் அறிவியல்தொழில்நுட்பம் என செயல்திறன் சார்ந்து இலக்கு நிர்ணயித்துள்ள இந்த நகர் தனது வளர்ச்சியை புதிய உயர்வுக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றது.