பிரிக்ஸ் ப்ளஸில் இணைவோம் – இலங்கை நம்பிக்கை
2024-04-30 19:41:28

பிரிக்ஸ் ப்ளஸ் அமைப்பில் இலங்கை விரைவில் இணையும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக ரஷியாவுக்கான இலங்கைத் தூதர் ஜனிதா அபேவிக்ரம லியனகே தெரிவித்தார்.

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சமீபத்தில் பாதுகாப்பு விவகாரங்கள் பொறுப்புடன் தொடர்புடைய உயர் அதிகாரிகளின் சர்வதேச கூட்டத்தில் இவர் பங்கேற்றார்.

அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். பிரிக்ஸ் ப்ளஸில் இணைவதன்மூலம், போக்குவரத்து மற்றும் உணவுப் பாதுகாப்பில் அதிக பலன்களை இலங்கை பெற வாய்ப்புண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பிரேசில் ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 உறுப்பினர்களைக் கொண்டிருந்த பிரிக்ஸ் அமைப்பில், ஜனவரி 1ஆம் தேதி சௌதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகள் இணைந்ததைத் தொடர்ந்து, உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.