சந்திர ஆய்வுக்கான சங் ஏ-6விண்கலம் ஏவுதல் வெற்றி
2024-05-03 20:14:09

சீனாவின் சந்திர ஆய்வுத் திட்டத்தின் விண்கலமான சங் ஏ-6 விண்கலம், மே 3ஆம் நாள் மாலை 527மணிக்கு வன்சாங் ஏவுதல் தளத்தில்,  லாங் மார்ச்-5 யெள 8 ஏவூர்தியுடன் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அது, திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையை அடைந்தது. உலகளவில் சந்திரனின் இருண்ட பக்கத்தில் மாதிரிகளைச் சேகரித்து புவிக்குத் திரும்பும் முதலாவது கடமையை சங் ஏ-6 விண்கலம் செயல்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏவுதல் முதல் விண்கலம் புவிக்குத் திரும்புவது வரை சுமார் 53 நாட்கள் தேவை என்று திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டப்பணியின்போது சங் ஏ-6 விண்கலம் சர்வதேச ஒத்துழைப்புக்கான திட்டங்களிலும் ஈடுபடும். ஐரோப்பிய விண்வெளி பணியகம், பிரான்ஸ், இத்தாலி, பாகிஸ்தான் ஆகியவற்றைச் சேர்ந்த 4 பன்னாட்டு ஆய்வு திட்டங்கள் சங் ஏ-6 விண்கலத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனிடையே, சீனத் தேசிய விண்வெளிப் பயணப் பணியகம் ஏற்பாடு செய்த சங் ஏ-6 விண்கலம் தொடர்பான பன்னாட்டு ஆய்வு கருத்தரங்கு 3ஆம் நாள் ஹாய்கோ நகரில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 12 நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள், சீனாவில் உள்ள தூதரகங்கள், ஐ.நா. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் முதலியவற்றைச் சேர்ந்த சுமார் 50 பன்னாட்டு விருந்தினர்கள் ஒத்துழைப்பு குறித்து கலந்தாய்வு நடத்தியதுடன், சங் ஏ-6 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதைப் பார்வையிட்டனர்.