இந்தியாவின் மணிப்பூரில் பலத்த மழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன
2024-05-06 18:48:09

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக மே 6 மற்றும் 7ம் நாள் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்று அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்தார்.

மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 4ம் நாள் முதல் இடைவிடாத மழை பெய்ததால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இம்பால் மேற்கு பகுதியில் உள்ள காஞ்சிபூர் மற்றும் தேரா உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் வாகனங்கள் மழையால் சேதமடைந்தன,

தற்போதைய வானிலை நிலைமைகளால் மாநிலத்தில் ஏற்படும் அபாயங்களுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிலையங்களை மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

"மக்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருகிறது" என்று அவர்  தெரிவித்துள்ளார்