தைவான் உலக சுகாதார மாநாட்டில் பங்கெடுப்பது பற்றிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் கருத்துக்கள்
2024-05-13 18:44:17

77ஆவது உலக சுகாதார மாநாட்டில் பங்கெடுப்பதற்கான அழைப்பு தற்போதுவரை இன்னும் கிடைக்கவில்லை என்று தைவான் தரப்பு தெரிவித்தது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 13ஆம் நாள் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அவர் கூறுகையில், சீனாவின் தைவான் பகுதி சர்வதேச அமைப்புகளில் பங்கெடுத்தால், ஒரே சீனா என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட வேண்டும். 2016ஆம் ஆண்டிலிருந்து தைவானின் ஆட்சிக்கு வந்த ஜனநாயக முற்போக்கு கட்சி, தைவான் சுதந்திரத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலைமையில், தைவான் பகுதி உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் பங்கெடுப்பதற்கான அரசியல் ரீதியிலான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

மேலும், தைவான் உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் பங்கெடுக்காவிடில், சர்வதேச தொற்று நோய் தடுப்பு அமைப்புமுறையில் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தைவானின் ஜனநாயக முற்போக்கு கட்சி அதிகார வட்டாரம் மற்றும் குறிப்பிட்ட நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து வாங் வென்பின் கூறுகையில், தைவான் அதிகாரிகளின் கூற்று என்பதே, அரசியல் பொய்கள் என்று குறிப்பிட்டார்.

கடந்த ஓராண்டில், உலக சுகாதார அமைப்பு நடத்திய தொழில் நுட்ப நடவடிக்கைகளில் பங்கெடுக்க சீனாவின் தைவானைச் சேர்ந்த 24 பேர் விண்ணப்பம் செய்தனர். சீன அரசு அனைத்து விண்ணப்பங்களுக்கும் அனுமதி வழங்கின. தைவானில் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகள் தொடர்பு மையம் உள்ளது. இதன் மூலம் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட பொது சுகாதார அவசரநிலைகள் குறித்த தகவல்களை உடனடியாகப் பெற முடியும். இவ்வமைப்புக்கு சரியான நேரத்தில் தகவல்கள் அளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.