சீனப் பயணம் மீது பாகிஸ்தான் தலைமையமைச்சரின் எதிர்பார்ப்பு
2024-06-05 17:46:33

சீனாவில் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, பாகிஸ்தான் தலைமையமைச்சர் ஷாபாஸ் ஷெரிஃப் சீன ஊடக குழுமத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையேயான நட்புறவு மிக நெருக்கமாக உள்ளது. சீனப் பயணம் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளதாகவும், பாகிஸ்தானும் சீனாவும் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை தொடர்ந்து ஆழமாக்க வேண்டும் என விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பாகிஸ்தானின் வரலாற்றில் இன்னல் மிக்க காலத்தில் சீனா பாகிஸ்தானுக்கு உதவி செய்துள்ளது. இதை மறுக்க போவதில்லை. நடப்பு சீனப் பயணத்தில் எங்கள் மாபெரும் நண்பரான சீனாவுடன் உரையாடல் நடத்தி, நடைமுறைக்கு வர கூடிய திட்டப்பணிகளுக்கான முதலீட்டை முன்னேற்றி, இரு நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கிடையேயான உரையாடலை ஆழமாக்கி, சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழிக் கட்டுமானத்தை புதிய மட்டத்திற்கு உயர்த்த விரும்புவதாக தெரிவித்தார்.

சீனாவுடன் இணைந்து, சீனா முன்வைத்த மூன்று உலகளாவிய முன்மொழிவுகளை ஆக்கமுடன் செயல்படுத்த பாகிஸ்தான் விரும்புவதாகவும், இம்முன்மொழிவுகள் உலகிற்கு அமைதி, முன்னேற்றம் மற்றும் செழுமையைக் கொண்டு வரும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.