ஏமாற்றம் செய்த ஜப்பானின் வாகன நிறுவனங்கள்
2024-06-07 09:52:05

சில நாட்களுக்கு முன்பு, சுசுகி உள்ளிட்ட ஜப்பானின் ஐந்து வாகன நிறுவனங்களின் சோதனை செயல்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட தரவு மோசடியில் அனைத்துத் தரப்புகளும் கவனம் செலுத்தியுள்ளன. இந்தச் சம்பவம் ஜப்பானின் வாகன சான்றிதழ் முறையின் அடித்தளத்தையே அசைத்துள்ளதோடு, ஜப்பான் வாகனத் துறையின் நம்பகத்தன்மையையும் பெரிதும் பாதித்துள்ளதாக ஜப்பானிய அமைச்சரவை செயலகத்தின் தலைவர் ஹயாஷி யோஷிமாசா தெரிவித்தார்.

"ஜப்பானில் தயாரிக்கப்பட்ட பொருள் இன்னும் நம்பகமானதா?" என்னும் கேள்வியுடன் ஜப்பானின் "அன்றாட செய்தி" 5ஆம் நாள் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில், தரவுகளின் படி கடந்த சில ஆண்டுகளில் ஜப்பானின் வாகனத் தொழிலில் ஒவ்வொரு ஆண்டும் மோசமான ஊழல்கள் நடைபெற்றது பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கட்டுரையில் ஜப்பானின் தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை, மோசடி மீறல்கள் தற்காலிக சம்பவம் அல்ல என்றும், அது வாகனத் தொழிலுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜப்பானின் முக்கியத் தொழிலான வாகனத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டால், அது ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர். ஜப்பான் அரசு மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆழமான சுய சோதனையின் அடிப்படையில் அனைத்து வகையான சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும். பிரச்சினையை முழுமையாகத் தீரக்கவும் வாகனங்களைப் பாதுகாப்பானதாக மாற்றவும் வேண்டும் என ஜப்பான் மற்றும் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர்கள் எதிர்பார்ப்பதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட விமர்சனக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.