© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
கடந்த ஆண்டு பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் தொடங்கியது முதல் இவ்வாண்டு ஜுன் 6ஆம் நாள் வரை, காசா பகுதியில் 36 ஆயிரத்து 654 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 83 ஆயிரத்து 309 பேர் காயமடைந்தனர் என்று காசா சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையில், சர்வதேசச் செஞ்சிலுவை சங்கக் குழுவின் தலைவர் மிர்ஜனா ஸ்போல்ஜரிக் அண்மையில் ஜெனீவாவில் சீன ஊடகக் குழுமத்திற்கு சிறப்பு நேர்காணல் அளித்தபோது கூறுகையில், கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் காசாவில் பயணம் மேற்கொண்டபோது, உள்ளூர் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு நான் கண்ட காட்சி எனக்கு அதிர்ச்சியை அளித்தது. ஆனால், அதற்குப் பின்னர், அங்குள்ள நிலைமை மேலும் மேலும் மோசமாகி வருகிறது. உள்ளூர் மக்கள், ராணுவ நடவடிக்கைகளினால் மட்டுமல்லாமல், உணவுப் பற்றாக்குறை காரணமாக பசியாலும் உயிரிழந்துள்ளனர். மருத்துவ அமைப்பு வேகமாக இயங்க இயலாது என்று குறிப்பிட்டார்.
பின்னர், காசாவில் மனிதாபிமான பேரழிவைத் தீர்ப்பதற்குரிய திறவுகோல் என்ன என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், மருத்துவ உதவி வழங்கி, நீர் விநியோகத்தை மீண்டும் தொடங்குவது, மக்களுக்கு அவசர உதவி வழங்குவது ஆகியவை, நமது முதன்மைப் பணியாகும். அதேபோல, காசாவில் சிறையில் வைக்கப்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்கவும் உதவி செய்து வருகின்றோம். இது தொடர்பாக பல்வேறு தரப்புகளுடன் தொடரந்து பேச்சுவார்த்தை நடத்தி, உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.
அவர் மேலும் கூறுகையில், அரசியல், பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய துறைகளில் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். இத்துறைகளுக்கு இடையே பாலத்தை உருவாக்கப் பாடுபடுகிறோம். பல்வேறு தரப்புகளும் பேச்சுவார்த்தைக்கு திரும்பி உடன்பாட்டை எட்ட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றோம். இந்த பாலத்தைக் கூடியவிரைவில் உருவாக்க வேண்டியது அவசியமானது. அதேவேளையில், ஆயுத வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்பு கிடைக்க வேண்டும். எனவே, சர்வதேச செஞ்சிலுவை சங்கக் குழு போன்ற மனிதாபிமான அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பது முக்கியமானது. ஏனென்றால், நடுநிலை மற்றும் நியாயமான நிலையைப் பின்பற்றி வரும் நமது சங்கத்தின் இலக்கு மனிதாபிமான உதவி செய்வது தான் என்று தெரிவித்தார்.
பல்வேறு நாடுகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் நடுநிலைத் தன்மையையும், மனிதாபிமான நடவடிக்கைகளின் நடுநிலைத் தன்மையையும் பேணிக்காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன். ஏனென்றால், நடுநிலை சீர்குலைக்கப்பட்டதன் காரணமாக, நமது அமைப்பினால் சில பகுதிகளில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை, இந்தப் பகுதிகளில், நம்மைத் தவிரவும் உதவி வழங்கும் வேறு அமைப்புகளும் இல்லை. இந்த உலகம், எந்தப் பக்கத்தை தேர்வு செய்யும்போதும் நாம், மனிதாபிமானத்தின் பக்கத்தில் மட்டுமே நிற்கிறோம். இதுவே, நமது இலக்கு ஆகும் என்று ஸ்போல்ஜரிக் குறிப்பிட்டார்.