சீன வாகனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றிய சுங்க வரி: வர்த்தகப் பாதுகாப்பு நடவடிக்கை
2024-06-14 09:10:36

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு 38.1 விழுக்காடு வரை தற்காலிக எதிர்ப்பு வரி விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் 13ஆம் நாள் அறிவித்துள்ளது. இதனிடையே, ஐரோப்பாவின் வாகனச் சந்தை, மின்சாரமயமாக்கம் மற்றும் காலநிலைக்கு நன்மை பயக்கும் வளர்ச்சி மாதிரியை நோக்கி முன்னேற்ற வேண்டும். அம்முன்னேற்றத்திற்கு இதைப் போன்ற வர்த்தகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நல்ல தேர்வாக அமையாது என்று ஜெர்மனின் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவுக்கு வோல்க்ஸ்வேகன், பென்ஸ், பி.எம். டபிள்யூ உள்ளிட்ட ஐரோப்பாவின் வாகன நிறுவனங்கள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சுங்க வரி விதிப்பு, ஐரோப்பாவின் வாகன நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்கும். அது மட்டுமல்லாமல், ஐரோப்பாவின் சொந்த நலன்களுக்கும் நன்மை பயக்காது என்று அவை தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சீன வணிகச் சங்கம் இதனை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக பாதுகாப்புவாத நடவடிக்கையானது, சீன-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக மோதலைத் தீவிரமாக்கியுள்ளதோடு, இரு தரப்புகளின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் வணிக உறவுக்கும் இடையூறு விளைவித்துள்ளதாக இச்சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய வாகன நிறுவனங்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள இந்த முடிவானது அரசியல் சூழ்ச்சி மட்டுமே ஆகும். உண்மையில், புதிய எரியாற்றல் வாகனத் தொழிற்துறையில், சீனாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையில் பரந்த நலன்கள் உள்ளன. வரலாற்று அனுபவங்களின்படி, சுங்க வரியை விதிப்பதன் மூலம், போட்டியாற்றலைக் கொண்டு வர முடியாது. அதோடு, வர்த்தக போட்டியில் யாவரும் வெற்றி பெற முடியாது. எனவே, இது தொடர்பில் உண்மையான, சரியான கருத்துக்களை ஐரோப்பிய ஒன்றியம் கேட்டறிந்து தவறான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.