தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த அமெரிக்காவுக்கு கண்டனம்
2024-06-20 19:30:49

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் ஜுன் 20ஆம் நாள் கூறுகையில், அமெரிக்கா, சீனாவின் உறுதியான மற்றும் கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், தைவான் பிரதேசத்துக்கு மீண்டும் ஆயுதங்களை விற்பனை செய்தது. இது ஒரே சீனா என்ற கோட்பாட்டையும், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மூன்று கூட்டறிக்கைகளையும் மீறி, சீனாவின் அரசுரிமை மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக, சீன-அமெரிக்க உறவையும், தைவான் நீரிணை பகுதியின் அமைதி மற்றும் நிலைத்தன்மையையும் சீர்குலைத்துள்ளது. சீனா இதற்கு கடும் கண்டனம் மற்றும் உறுதியான எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றார்.

தைவான் சுதந்திரச் சக்திகளின் பிரிவினை செயல்களும், அமெரிக்காவை மையமாக கொண்ட வெளிப்புறச் சக்திகளின் ஆதரவும், தைவான் நீரிணையில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். தைவான் பிரச்சினை, சீனாவின் மைய நலன்களிலுள்ள மைய அம்சமாகும். தைவான் சுதந்திரத்தை எதிர்த்து, அரசுரிமை மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டைப் பேணிக்காப்பதற்கான சீனாவின் மனவுறுதி மற்றும் வலிமையான திறனை எவரும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.