தீவிர காலநிலை பற்றிய உலக வானிலை அமைப்பின் கருத்து
2024-06-30 17:33:08

இவ்வாண்டு, உலகின் பல இடங்களில் புயல் மழை, வெள்ளப்பெருக்கு, வெப்ப சலனம், வறட்சி உள்ளிட்ட தீவிர காலநிலையின் பாதிப்பால், பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. பசுங்கூட வாயுக்கள் வெளியேற்றத்தால் காலநிலை மாற்றம், இதன் முக்கிய காரணமாகும் என்று உலக வானிலை அமைப்பு ஜுன் 28ஆம் நாள் தெரிவித்தது.

உலக வானிலை அமைப்பின் நிபுணர் ஒருவர் 28ஆம் நாள் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக, வெப்ப சலனம், பெரும் மழை உள்ளிட்ட தீவிர காலநிலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாண்டு, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் வெப்ப சலனத்தின் காரணமாக பெரும் இழப்பு ஏற்பட்டது. இது மனித குலத்தின் ஆரோக்கியம் மற்றும் நலன்களுக்கு கடும் அறைக்கூவலாக அமைந்துள்ளது என்றார்.

கடந்த ஆண்டு தொடங்கிய எல்நீனோ காலநிலை முடிவடைந்த போதிலும், புதிய மதிப்பீட்டின்படி, ஜூலை முதல் செப்டம்பர் திங்கள் வரை, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் மிகப் பெரும்பாலான பகுதிகளிலும், வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும், தட்ப வெட்ப நிலை சராசரி நிலையை விட அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.