ஷிச்சின்பிங் ஹசினாவுடன் சந்தித்துரையாடினார்
2024-07-10 20:54:56

சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 10ஆம் நாள் மாலை பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள வங்காள தேச தலைமையமைச்சர் ஹசினா அம்மையாரைச் சந்தித்துரையாடினார். சீன-வங்காள தேச உறவை பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவாக உயர்த்துவதாக இரு நாடுகளின் தலைவர்கள் அறிவித்தனர்.

சீனாவும் வங்காள தேசமும் தூதாண்மை உறவை நிறுவியது முதல் இதுவரை, இருநாடுகள் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, ஆதரவளித்து, சமத்துவ முறையில் ஒத்துழைத்து கூட்டு நலன் பெறுவதைக் கடைப்பிடித்து வருகின்றன. இரு தரப்பும் தலைசிறந்த பாரம்பரியத்தை தொடர்ந்து வெளிக்காட்டி, அரசியலில் பரஸ்பர நம்பிக்கையை ஆழமாக்க வேண்டும். நாட்டின் ஆட்சி முறை அனுபவங்கள், வளர்ச்சித்துறை பற்றிய கொள்கைகள் ஆகியவற்றில் சீனா வங்காள தேசத்துடன் பரிமாற்றம் மேற்கொண்டு, பொருளாதார வர்த்தக முதலீடு, ஒன்றுக்கொன்று தொடர்பு ஆகிய துறைகளிலான ஒத்துழைப்பை ஆழமாக்க சீனா விரும்புகின்றது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். சீனா, வங்காளத்துடன் சர்வதேச மற்றும் பிரதேச விவகாரம் பற்றிய ஒருங்கிணைப்பை அதிகப்படுத்தி, ஐ.நா உள்ளிட்ட பலதரப்பு கட்டுக்கோப்பில் ஒன்றிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் விரும்புவதாக ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

வங்காள தேசத்தின் தேசிய விடுதலை மற்றும் வறுமை ஒழிப்பு லட்சியத்துக்கு சீனா வழங்கிய மாபெரும் ஆதரவுக்கு ஹசினா நன்றி தெரிவித்தார். வங்காள தேசம் ஒரே சீனா என்ற கோட்பாட்டை உறுதியாக பின்பற்றி, தைவான் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு அளிக்கிறது என்றும். சீனாவின் உள் விவகாரத்தில் வெளி சக்தியின் தலையீட்டை உறுதியாக எதிர்க்கிறது என்றும் ஹசினா தெரிவித்தார். மேலும் வங்காள தேச-சீனாவின் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவு எதிர்காலத்தில் மாபெரும் வளர்ச்சியடையும் என்று ஹசினா நம்பிக்கை தெரிவித்தார்.