இலங்கையில் மின் கட்டணம் சராசரியாக 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது
2024-07-16 17:12:21

இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கடந்த திங்களன்று நாடு முழுவதும் மின்சார கட்டணம் சராசரியாக 22.49 சதவீதம் குறைக்கப்படுவதாகவும், 16 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

விஜேசேகர சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை மின்சார கட்டணத்தை திருத்துவதற்கான அரசாங்கத்தின் கொள்கை முடிவின்படி இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையத்தின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ,  30 யூனிட்டுக்கு குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு 25 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

61 முதல் 90 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும்  நுகர்வோரின் மாதாந்திரக் கட்டணம் 55 சதவீதம் குறைக்கப்படும் என்றும், மத வழிப்பாட்டு பகுதிகளுக்கான மின் கட்டணம் சுமார் 30 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று பெர்னாண்டோ கூறினார்.

இலங்கையில் 2024 ஆம் ஆண்டில் கடந்த மார்ச் மாதம் மின்சாரக் கட்டணங்கள் 21.9 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.