சீன-ஆப்பிரிக்க குழந்தைகளுக்கான கோடைக்கால முகாமில் பெங் லீயுவான் பங்கேற்பு
2024-07-20 15:52:21

பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் ‘சூரிய ஒளியில் அன்பு’ எனும் சீன-ஆப்பிரிக்க குழந்தைகளுக்கான கோடைக்கால முகாம் நிகழ்ச்சியில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி ஜுலை 19ஆம் நாள் பிற்பகல் பங்கேற்றார்.

காச நோய் மற்றும் எய்ட்ஸ் நோய்க்கான உலக சுகாதார அமைப்பின் நல்லெண்ணத் தூதரும், பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் கல்வி மேம்பாட்டுக்கான யுனெஸ்கோவின் சிறப்புத் தூதருமான பெங் லீயுவான் கூறுகையில், கோடைக்கால முகாம் என்பது சீன மற்றும் ஆப்பிரிக்க குழந்தைகள் ஒன்றுகூடுவது மட்டுமல்ல, சீன-ஆப்பிரிக்க நெருக்கமான உறவின் நல்ல எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது என்று குறிப்பிட்டார். மேலும், சீன மற்றும் ஆப்பிரிக்க மக்கள், தங்கள் மகிழ்ச்சியைத் தேடுவதில் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

கோடைக்கால முகாமில் உள்ள குழந்தைகள், சீனாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவின் வாரிசுகளாக மாற வேண்டும் என்றும், சீனா-ஆப்பிரிக்கா இடையேயான பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவதில் ஒரு புதிய சக்தியாக மாற வேண்டும்  என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், சீன-ஆப்பிரிக்க குழந்தைகளுடன் இணைந்து பெங் லீயுவான், சீன பாரம்பரிய பண்பாடுகளின் கண்காட்சியை கண்டுரசித்தார்.


தென்னாப்பிரிக்கா, நமீபியா, சோமாலியா, உகாண்டா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளும், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் லியாங்ஷான் மற்றும் யுன்னான் மாகாணத்தின் ரூய்லி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளும் இந்த முகாமில் கலந்து கொண்டுள்ளனர்.