வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையில் சீனா உறுதி
2024-07-22 10:59:43

விரிவான சீர்திருத்தங்களை மேலும் ஆழமாக்குவது மற்றும் சீன நவீனமயமாக்கலை முன்னெடுப்பது பற்றிய தீர்மானம் அண்மையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வில் நிறைவேற்றப்பட்டது. வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றி, வெளிநாட்டுத் திறப்பின் மூலம் சீர்திருத்தத்தை முன்னேற்றி, மேலும் உயர்நிலை திறப்புத் தன்மை வாய்ந்த புதிய பொருளாதார அமைப்பை உருவாக்க வேண்டும் என்று இத்தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டது.

உலகளவில் நூறு ஆண்டுகளாகக் கண்டிராத மாற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒருதரப்புவாதம் பாதுகாப்புவாதம் ஆகியவை தலைதூக்கி வருகின்றன. வெளிநாட்டு உயர்தரத் திறப்பை சீனா முன்னெடுக்கும் போக்கில், சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சி முன்னேற்றத்தில் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை, வெற்றியாகத் திகழ்வதோடு, உலகத்துடன் வாய்ப்புகளை சீனா பகிர்ந்து கொள்வதன் மனவுறுதியையும் பொறுப்பையும் காட்டுகிறது.

வெளிநாட்டுத் திறப்பு அளவை விரிவாக்குவதற்கு இறக்குமதிக்கு மட்டுமல்ல, ஏற்றுமதி அதிகரிப்பும் தேவை. தற்போது மின்னாற்றல் வாகனம், லித்தியம் மின்கலன், ஒளி வோல்டா பொருட்கள் முதலிய சீனத் தயாரிப்புகள், வெளிநாட்டுச் சந்தைகளில் வரவேற்கப்படுகின்றன. அவை, உலகிற்கு தரமுள்ள பொருட்களை வழங்குவதோடு, உள்ளூர் பொருளாதாரம் மேம்படுவதையும் முன்னேற்றியுள்ளன. இந்த போக்கில், சீனா முன்மொழிந்த கூட்டுக் கலந்தாய்வு, கூட்டுக் கட்டுமானம் மற்றும் கூட்டு அனுபவித்தல் கருத்து, உலக மேலாண்மைக்குப் புதிய நிலைமையைக் கொண்டு வந்துள்ளது.