உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில் துறைமுக சட்டத் திருத்தம் செய்ய இலங்கை முடிவு
2024-07-31 18:49:25

கொழும்பு துறைமுக நகரத்தை உலகளாவிய போட்டித்திறன் கொண்ட சிறப்பு பொருளாதார மண்டலமாக மேம்படுத்தும் வகையில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டின் செய்தித் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் அரசு தலைவர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சரவையில் முன்மொழிந்துள்ள இந்த சட்டத் திருத்தம், துறைமுகத்தின் வளர்ச்சிக்கான தடைகளை அகற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரம் கடலில் இருந்து 269 ஹெக்டேர் நிலப்பரப்பில் சேவை சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலமாக நிறுவப்படுகிறது.

இலங்கையின் துறைமுக நகரம் 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை ஈர்க்கும் என சர்வதேச நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளதாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மாற்றத்தை அளிக்கும் சிறந்த ஆற்றலை கொழும்பு துறைமுக நகரம் கொண்டுள்ளது என்று இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..