இந்தியாவின் எட்டு முக்கிய தொழில்களின் உற்பத்தி 4 சதவீதம் அதிகரிப்பு: தொழில்துறை அமைச்சகம் தகவல்
2024-08-01 19:00:33

கடந்த ஜுன் மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த உற்பத்தி குறியீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4 சதவீதம் அதிகரித்துள்ளது என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் எஃகு ஆகியவை இந்தியாவின் எட்டு முக்கிய தொழில் உற்பத்தி துறைகள் ஆகும்.

நிலக்கரி, மின்சாரம், இயற்கை எரிவாயு, எஃகு, உரங்கள் மற்றும் சிமென்ட் ஆகிய தொழில்களின் உற்பத்தி நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்தாலும், கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழில்களின் உற்பத்தி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் சிமெண்ட் உற்பத்தி 1.9 சதவீதமும், நிலக்கரி உற்பத்தி 14.8 சதவீதமும், மின்சார உற்பத்தி 7.7 சதவீதமும், உரங்கள் 2.4 சதவீதமும், இயற்கை எரிவாயு 3.3 சதவீதமும், எஃகு உற்பத்தி 2.7 சதவீதமும் அதிகரித்துள்ளன.

கச்சா எண்ணெய் உற்பத்தி 2.6 சதவீதமும், பெட்ரோலிய சுத்திகரிப்பு உற்பத்தி 1.5 சதவீதமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.