இந்திய அந்நிய செலாவணி கையிருப்பு 674.91 பில்லியன் டாலரை எட்டி வரலாறு காணாத உயர்வு
2024-08-11 16:33:57

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, கடந்த ஆகஸ்ட் திங்கள் 2ம் நாளுடன் முடிவடைந்த வாரத்தில், 7.53 பில்லியன் டாலர் அதிகரித்து, மொத்த கையிருப்பு 674.91 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் இதுவரை இல்லாத  புதிய உயர்வு ஆகும். ஜூலை 26 ஆம் நாளுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில் 3.471 பில்லியன் அமெரிக்க டாலர் கையிருப்பில் சரிவு ஏற்பட்டிருந்தது.

அந்நிய செலாவணி கையிருப்பின் மிகப்பெரிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துக்கள் (எஃப்.சி.ஏ) 5.162 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்து அதன் கையிருப்பு 592.039 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. அதேபோல், தங்கத்தின் கையிருப்பு 2.404 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 60.099 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு இந்த ஆண்டில் இதுவரை 45 முதல் 50 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது என்று "மின்ட்" ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.