தானிய நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ள சூடான்
2024-08-11 17:36:30

சூடானில் நிகழ்ந்த ஆயுத மோதல், அந்நாட்டின் வேளாண் துறையைக் கடுமையாக பாதித்துள்ளது. அந்நாட்டில் தானிய விளைச்சல் பெருமளவில் குறைந்துள்ளது. முன்பு கண்டிராத தானியப் பாதுகாப்பு நெருக்கடியில் சூடான் சிக்கி கொண்டுள்ளது என்று ஐ.நா உணவு மற்றும் வேளாண் அமைப்பு அண்மையில் தெரிவித்தது

வேளாண்மை, சூடானின் மிக முக்கிய தொழில்களில் ஒன்றாகும். அந்நாட்டில் சுமார் 65 விழுக்காட்டினர் வேளாண் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஓராண்டுக்கு மேல் நீடிக்கும் போர், அந்நாட்டின் வேளாண் அடிப்படை வசதிகளைக் கடுமையாக சீர்குலைத்து, தானிய வர்த்தகம் மற்றும் வேளாண் பொருட்களின் வினியோக சங்கிலியைத் துண்டித்து, வேளாண் சாதனங்கள், உரம் மற்றும் விதை முதலிய பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் வேளாண் உற்பத்திக்கான ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. வேளாண் பொருட்களின் உற்பத்தி அளவு பெருமளவில் குறைந்துள்ளது.

மேலும், ஆயுத மோதலால், அந்நாட்டில் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் பேர் வீடுவாசலின்றி அல்லல்பட்டுள்ளனர். அதிகமான வேளாண் உழைப்பாளர்கள் தாயகத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில்,  வேளாண் வயலின் சாகுபடி விகிதம் பெரிதும் குறைந்து விட்டது. 2024ஆம் ஆண்டு, சூடானின் மத்திய பகுதி மற்றும் தென் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய வேளாண் பகுதிக்கு மோதல் பரவி வருவதுடன், அந்நாட்டில் விளை நிலப்பரப்பு மேலும் குறைந்துள்ளது.