காசா பிரதேசத்தில் போர் நிறுத்தம் பற்றி குட்ரேஸ் வேண்டுகோள்
2024-08-13 19:45:30

காசா பிரதேசத்திலுள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் இராணுவத் தாக்குதல் தொடுத்து, அதிக உயிரிழப்பு ஏற்பட்டதற்கு, ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் ஆகஸ்டு 12ஆம் நாள் கண்டனம் தெரிவித்தார். இஸ்ரேலும், பாலஸ்தீன ஹமாஸ் இயக்கமும் பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்தி, போர் நிறுத்தமும், தடை காவலில் வைக்கப்பட்டவர்களை விடுவிப்பதும் குறித்து உடன்படிக்கையை எட்ட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், சர்வதேச மனித நேய சட்டத்தை எப்போதுமே பின்பற்றி, காசா பிரதேசத்திலுள்ள அப்பாவி மக்களின் பாதுகாப்பைப் பேணிக்காத்து, மனித நேய உதவிப் பொருட்கள் காசா பிரதேசத்துக்கு அனுப்பப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்றும் குட்ரேஸ் வலியுறுத்தினார்.

போர் நிறுத்தம் பற்றிய சர்வதேச சமூகத்தின் விருப்பத்தை பொருட்படுத்தாமல், காசா பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டது. காசா பிரதேச சுகாதார அமைப்பு 12ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 48 மணி நேரத்துக்குள், இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளில் 142 பேர் உயிரிழந்தனர். 150 பேர் காயமுற்றனர்.