வியட்நாம் அரசுத் தலைவர் சீனாவில் பயணம்
2024-08-15 17:24:48

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான டோ லாம் ஆகஸ்டு 18 முதல் 20ஆம் நாள் வரை சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா ச்சுன்யிங் அம்மையார் 15ஆம் நாள் தெரிவித்தார்.

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் கடந்த ஆண்டில் வியட்நாம் பயணத்தில் படைக்கப்பட்டுள்ள சாதனைகளை, சீனாவும் வியட்நாமும் தற்போது செயல்படுத்தி வருகின்றன. நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த சீன-வியட்நாம் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானம் செவ்வனே துவங்கியுள்ளது. இப்பயணத்தின் மூலம், இரு நாட்டுப் பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்தி, தத்தமது தனிச்சிறப்புடைய சோஷலிச நவீனமயமாக்கப் பாதையில் கூட்டாக முன்னேறி, பிரதேச மற்றும் உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான பங்காற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.