இந்தியாவில் உள்ள சதுப்பு நிலங்கள் பட்டியலில் புதிதாக 3 இடங்கள் சேர்க்கப்பட்டதையடுத்து அதன் எண்ணிக்கை 85 ஆக உயர்வு
2024-08-15 17:42:14

ராம்சர் தளங்கள் என்றும் அழைக்கப்படும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களின் பட்டியலில் மேலும் மூன்று இடங்களை இந்தியா சேர்த்துள்ளது, இதனையடுத்து இதன் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் கடந்த புதன்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ், தமிழகத்தில் இரண்டு இடங்களும், மத்திய பிரதேசத்தில் ஒரு இடமும் இப்பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

தமிழகத்தில் "நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் மற்றும் கழுவேலி பறவைகள் சரணாலயம், மத்திய பிரதேசத்தை  சேர்ந்த  தவா நீர்த்தேக்கம் ஆகியவை சதுப்பு நிலங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

புதிதாக நியமிக்கப்பட்ட இந்த தளங்கள் நாட்டில் சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான அமைச்சகத்தின் கொள்கைக்கு ஒரு சான்றாகும் என்று தெரிவித்துள்ளது.