மோடி - ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு பின் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து
2024-08-24 17:13:32

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாடுகளுக்கிடையே மருத்துவத் துறை, விவசாயத்துறை ஒத்துழைப்பு, மனிதாபிமான உறவுகள் மற்றும் கலாச்சாரம் குறித்த ஒப்பந்தங்கள் கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்பட்டதாக ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தினார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டுவர உதவும் அனைத்து வழிகளிலும் பங்களிக்க இந்தியா தயாராக இருப்பதாக மோடி மீண்டும் வலியுறுத்தினார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்திய தரப்பு தனது கொள்கை நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய நிலையில் போரை நிறுத்த பேச்சுவார்த்தை மற்றும் தூதாண்மை வழிகள் மூலம் அமைதியான முறையில் தீர்வு காண கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்குப் பிறகு, மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதும், அமைதியை நிலைநாட்டுவதும் உக்ரைனுக்கு முன்னுரிமை என்று ஜெலன்ஸ்கி  தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.