அரசு ஊழியர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு இந்தியா ஒப்புதல்
2024-08-26 17:16:19

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், அரசு ஊழியர்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் புதிய ஓய்வூதிய திட்டம் அல்லது நடைமுறையில் உள்ள தேசிய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம் எனக் கூறினார்.

மத்திய அரசு கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணிபுரிந்த அரசு ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடைசி 12 மாதங்களில் அவர் பெற்ற சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீத தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு ஊழியர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிப்புரிந்த பின் ஓய்வு பெறும் போது மாதத்திற்கு 10,000 ரூபாய் என உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர் உயிரிழந்தால் அவரது ஓய்வூதியத்தில் 60 சதவீதம் வரை  அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் உடனடியாக வழங்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.