இவ்வாண்டின் முதல் 8 திங்கள்காலத்தில் சீனாவின் சரக்கு வர்த்தகம் அதிகரிப்பு
2024-09-10 11:32:56

சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் வெளியிட்ட தரவுக்களின்படி, இவ்வாண்டின் முதல் 8 திங்கள்காலத்தில், சீனாவின் மொத்தச் சரக்கு வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை 28 இலட்சத்து 58 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டை விட 6 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில், ஏற்றுமதித் தொகை 16 இலட்சத்து 45 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டை விட 6.9 விழுக்காடு அதிகரித்தது. இறக்குமதித் தொகை 12 இலட்சத்து 13 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டை விட 4.7 விழுக்காடு அதிகரித்தது.

இதே காலத்தில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவைக் கூட்டாகக் கட்டியமைக்கும் நாடுகளுக்கான சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை 13 இலட்சத்து 48 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டை விட 7 விழுக்காடு அதிகரித்தது. இதில், ஆசியானுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை 4 இலட்சத்து 50 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டை விட 10 விழுக்காடு அதிகரித்து, இதே காலத்தில் சீனாவின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகையில் 15.7 விழுக்காட்டை வகிக்கிறது. சீனாவுக்கான மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக ஆசியான் தொடர்ந்து விளங்குகிறது.