இந்தியாவின் நீர் பாதுகாப்பு வளர்ச்சிக்கு ஆசிய வளர்ச்சி வங்கி கடன் வழங்க ஒப்புதல்
2024-09-21 16:59:02

காலநிலை மாற்றத்தின் விளைவாக,  நீர்வள மேலாண்மை, நீர் விநியோகம் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்த 50 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை இந்தியாவுக்கு, வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) ஒப்புதல் அளித்துள்ளது.

மேகாலயா மாநிலத்தில் 12 மாவட்டங்களில், நீர் சேமிப்பு திட்டங்கள், வானிலை மாற்றங்களால் ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொள்ளும் வகையிலான மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் 532 நீர் சேகரிப்பு திட்டங்களை உருவாக்க உதவும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

இத்தகைய வலுவான நீர் சேமிப்பு திட்டங்கள் மூலம் பருவமழை காலத்தில் அதிக மழை பொழிவு மற்றும் திடீர் வெள்ளத்தை திறம்பட கையாளவும், நிர்வகிக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய வெள்ள மேலாண்மைத் திட்டங்கள் மூலம் சேமிக்கப்படும் நீர்  குளிர்காலம் மற்றும் வறண்ட காலங்களில் பாசனத்திற்கு வழங்க  முடியும்.  இத்திட்டத்தால் குறைந்தபட்சம் 3,000 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு நம்பகமான நீர்ப்பாசனம் வழங்குவதற்கான திட்டம் உருவாகும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.