இலங்கை அரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நிறைவடைந்தது
2024-09-22 16:25:58

இலங்கையில் அரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை அமைதியாக நடந்து முடிந்தது, வாக்குகளைக் கணக்கிடும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 13,000 க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு  மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.

17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சுமூகமான மற்றும் பாதுகாப்பான வாக்களிப்பு செயல்முறையை  உறுதிபடுத்தும் வகையில் நாடு முழுவதும் சுமார் 63,000 காவல்துறை அதிகாரிகள் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த தேர்தலில் தற்போதைய அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க் கட்சியான சமக்கி ஜன பாலவேகா சார்பில் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க உட்பட மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இலங்கையில் ஒரு வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் தேவை. எந்தவொரு வேட்பாளரும் அத்தகைய பெரும்பான்மையைப் பெறவில்லை என்றால், அது இரண்டாவது சுற்று வாக்கு கணக்கிடுதலுக்கு  வழிவகுக்கும், அங்கு வாக்காளர்களின் இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்பு வாக்குகள் முதல் இரண்டு வேட்பாளர்களுக்கு கணக்கிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.