சீன மின்சார வாகனங்கள் மீது கனடா கூடுதலான வரி வசூலிப்பது குறித்து சீனா பதில்
2024-10-02 19:11:00

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள் மீது 100 விழுக்காட்டு சுங்க வரி வசூலிப்பதன் விதிகள் அக்டோபர் 1-ஆம் நாள் முதல் அமலுக்கு வருவதாக கனடா முன்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அக்டோபர் 22ஆம் நாள் முதல், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் தயாரிப்புகள் மீது 25 விழுக்காடு வரி வசூலிப்பதன் இறுதிக்கட்ட பட்டியலும் வெளியிடப்பட்டது.

இது குறித்து சீன வணிக அமைச்சகம் 2ஆம் நாள் பதிலளிக்கையில்

கனடாவின் இந்த ஆவணங்களில் சீனா கவனம் செலுத்தியுள்ளது. கடந்த சில காலங்களில், கனடா தரப்பு பலமுறை உண்மைகளைப் புறக்கணித்து, பொருளாதார வர்த்தகத் துறையில் சர்வதேச விதிமுறைகளைப் பொருட்படுத்தாமல், குறிப்பிட்ட ஒரு நாட்டைப் பின்பற்றி, சீனா மீது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கனடாவின் இச்செயல், சந்தைப் பொருளாதாரம் மற்றும் நியாயமான போட்டி என கோட்பாடுகளை மீறியுள்ளது. கனடாவின் ஒருதலைப்பட்ச செயல் மற்றும் வர்த்தகப் பாதுகாப்புவாதம் மீது சீனா உலக வர்த்தக அமைப்பிடம் வழக்கு தொடுத்துள்ளது. அதேவேளையில், சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க, அனைத்து தேவையான நடவடிக்களையும் சீனா மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.