இந்தியா, மாலத்தீவு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன
2024-10-08 18:46:23

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு ஆகியோர் முன்னிலையில் இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே பல்வேறு துறைகளிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கடந்த திங்கள்கிழமை கையெழுத்தாகின.

மாலத்தீவு அதிபர் முய்ஸு 5 நாள் அரசு முறைப் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்முறை இந்தியா வந்தார். மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நாணயம் மாற்று, காவல்துறை, ஊழல் தடுப்பு, நீதித்துறை பயிற்சி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் உள்ளிட்ட துறைகள் அடங்கும்.

தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான "ஒருங்கிணைந்த  பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான" ஆவணத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஒப்பந்தங்கள் கையெழுத்திட்ட விழாவில் மாலத்தீவில் இந்தியாவின் ரூபே கார்டு அறிமுகம், ஹனிமாதோ சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஓடுபாதை திறப்பு விழா மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் கடன் ஏற்பாட்டின் கீழ் கட்டப்பட்ட 700 வீடுகள் ஒப்படைப்பு ஆகியவை  நடைபெற்றதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு,  பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்ததாக வெளியிடப்பட்ட  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.