சீனத் தலைமையமைச்சர் மற்றும் ஐரோப்பியப் பேரவையின் தலைவரின் சந்திப்பு
2024-10-11 15:03:28

அக்டோபர் 11ஆம் நாள் லாவோஸின் தலைநகரான வியண்டியனில் நடைபெற்ற கிழக்காசிய ஒத்துழைப்புத் தலைவர்களின் தொடர் கூட்டத்தில் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஐரோப்பியப் பேரவையின் தலைவர் சார்லஸ் மிச்சேலைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய லீ ச்சியாங், சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவின் ஆரோக்கியமான, நிலையான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவதென்பது சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொறுப்பு மட்டுமல்ல, சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பும் ஆகும் என்றார். அடுத்த ஆண்டு, சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவாகும். இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவின் நிதானமான சீரான வளர்ச்சிப் போக்கை மேலும் வலுப்படுத்தி, அரசியல் துறையில் ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை அதிகரித்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு தரப்பின் மக்களின் நலன்களை உயர்த்துவதற்கும் உலக அமைதி வளர்ச்சி இலட்சியத்தை முன்னேற்றுவதற்கும் முக்கியப் பாங்காற்ற சீனா விரும்புவதாகவும் அவர் கூறினார்.