ரஷிய மற்றும் ஈரான் அரசுத் தலைவர்களிடையே சந்திப்பு
2024-10-12 18:24:35

படம்:CFP

ரஷிய அரசுத்தலைவர் விளாடிமிர் புதினும், ஈரான் அரசுத்தலைவர் மசூத் பெசஷ்கியானும் அக்டோபர் 11ஆம் நாள் சந்தித்து நடத்திய போச்சுவார்த்தையில், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளனர். அன்று துர்க்மெனிஸ்தான் தலைநகர் அஷ்கபாத்தில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் பங்கேற்ற போது, புதின் மற்றும் பெசஷ்கியான் ஆகிய இருவருக்கிடையே இந்த சந்திப்பு நடத்தப்பட்டது.

இயற்கை எரிவாயு, நெடுஞ்சாலை மற்றும் தொடர்வண்டிப் பாதைக் கட்டுமானம், கடல் நீர் சுத்திகரிப்பு,  எரிசக்தி, மின்னாற்றல் உள்ளிட்டவைத் தொடர்பான செயல்திட்டங்களின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்த இரு தரப்பினரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளதாக, ஈரான் அரசுத்தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரேநாளில், ஈரானின் எரிசக்தி துறைகள் மீது கூடுதலான தடைகள் விதிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. அதாவது, ஈரானின் எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் துறைகள் மீது கூடுதலான தடைகளை விதித்து, மேலதிக நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் கப்பல்களை தடைப் பட்டியலில் சேர்த்துள்ள நிலையில், இவை அமெரிக்காவின் நிதி அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கு தடை செய்துள்ளது. மேலும், அமெரிக்க குடிமக்கள் அவற்றுடன் வணிகத்தில் ஈடுபட அனுமதி இல்லை எனவும் அமெரிக்கா தெரிவித்தது.