சீனாவில் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையை உயர்த்தும் புதிய நடவடிக்கைகள்
2024-10-13 17:29:33

படம்:CFP

2023ஆம் ஆண்டு நாடு முழுவதும் 9320 கோடி யுவான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொத்தம் 3 கோடியே 10 லட்சம்  பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வட்டி மானியம் உள்ளிட்ட கொள்கைகளின் மூலம் 7000 கோடி யுவான் கல்விக் கடன்  அளிக்கப்பட்டுள்ளது என்று சீன நிதி அமைச்சகம் சனிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது. சீன நிதித் துறைத் துணை அமைச்சர் குவோடிங்டிங் கூறுகையில் அடுத்து 2 கட்டங்களாக பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவிக் கொள்கைகளை வகுக்கும் விதம் நிதி அமைச்சகம் செயல்படும் என்று குறிப்பிட்டார்.

அதன்படி, 2024ஆம் ஆண்டு தேசிய கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரிக்கும். அவர்களில், தொடக்க கல்லூரிகள் மற்றும் இளநிலை பட்டம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 60ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 20ஆயிரமாக அதிகரிக்கும். முதுநிலை பட்டம் மற்றும் முனைவோர் பட்டம் படிப்புக்கான மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தலா 35ஆயிரத்திலிருந்து 70ஆயிரமாகவும், 10ஆயிரத்திலிருந்து 20ஆயிரமாகவும் உயரும். இளநிலை பட்டம் படிக்கும் மாணவர் ஒவ்வொருவருக்கும் கல்வியுதவித் தொகை ஆண்டுதோறும், 8ஆயிரத்திலிருந்து 10ஆயிரமாக உயர்த்தப்படும்.

2025ஆம் ஆண்டு, முதுநிலை பட்டம் படிப்புக்கான மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையின் வரம்பு உயர்த்தப்படும். அதேவேளையில், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தொழில்முறைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வியுதவி தொகையும் அதிகரிக்கப்படும் என்று நிதித் துறை துணை அமைச்சர் தெரிவித்தார்.