வெளிநாட்டவர்களின் பயணங்களை எளிதாக்கும் வசதியை மேம்படுத்தும் சீனா
2024-10-23 11:04:54

விசா விலக்கு உள்ளிட்ட கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளைச் சீனா முழுமைப்படுத்தவும் சீனாவிற்கு வரும் வெளிநாட்டவர்களின் பயணத்திற்கான வசதியை மேம்படுத்தவும் சீனா முனைப்புடன் செயல்படும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியான் 22ஆம் நாள் தெரிவித்தார்.

அண்மையில், பிரான்ஸ், அமெரிக்கா, சிங்கப்பூர் முதலிய செய்தி ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் படி, கடந்த சில ஆண்டுகளில் விசா விலக்கு உள்ளிட்ட சில கொள்கைகளை அமலாக்குவது, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான உதவி வழங்குவது, மொழிபெயர்ப்பு சேவை மற்றும் விரைவுப் போக்குவரத்து அமைப்பை முழுமையாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள், சீனாவில் வெளிநாட்டுப் பயணிகளின் பயணங்களைப் பெரிதும் எளிதாக்கும். இந்நிலையில், அதிக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சீனாவுக்கு வந்து பயணம் மேற்கொள்கின்றனர்.

இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், பல்வேறு நுழைவு வாயில்களின் மூலம் சீனாவிற்கு வந்துள்ள வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 81 இலட்சத்து 86 ஆயிரத்தை எட்டி, கடந்த ஆண்டை விட 48.8 விழுக்காடு அதிகமாகும். மேலும், வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, தற்போது ஐரோப்பாவில் சீனப்பயணங்களின் முன்பதிவுகளின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டின் அளவை விட அதிகமாக உள்ளது  என்றும் லின் ஜியான் குறிப்பிட்டார்.