இந்தியாவின் ஒடிசா, மேற்கு வங்கத்தில் கரையை கடந்த டானா புயல்
2024-10-25 16:48:08

கிழக்கு இந்திய மாநிலங்களான ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோரப் பகுதிகளை பலத்த காற்றுடன் டானா புயல் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பிதர்கனிகா மற்றும் பத்ரக்கில் உள்ள தம்ரா இடையே டானா புயல் கரையை கடந்தது. மணிக்கு 100-110 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன மற்றும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் இப்பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை மாலை நிறுத்தப்பட்ட புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களின் சேவை வெள்ளிக்கிழமை காலை மீண்டும் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு மாநிலங்களிலும் உள்ள உள்ளூர் அரசாங்கங்கள் டானா புயலுக்கு முன்னதாக 10 இலட்சம் மக்களை வெளியேற்றியுள்ளன.மேலும் பள்ளிகளும் மூடப்பட்டன மற்றும் 400க்கும் மேற்பட்ட இரயில்களும் இரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.