மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள பல்வேறு தரப்புகள் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த ஐ.நா. வேண்டுகோள்
2024-10-27 16:47:59

மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள பல்வேறு தரப்புகள் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தி, முழுமையான அளவிலான பிராந்திய போரைத் தவிர்க்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் 26ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.

தனது செய்தித் தொடர்பாளரின் மூலம் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஈரானின் ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பிறகு மத்திய கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக தீவிரமாகி வரும் நிலைமை குறித்து குட்டரெஸ் கடும் அதிர்ச்சி அடைந்ததாகவும், நிலைமையைத் தீவிரமாக்கும் எந்தவித செயல்களும் கண்டிக்கப்பட்டு, நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா பகுதி மற்றும் லெபனானின் ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் பல்வேறு தரப்புகள் நிறுத்த வேண்டும். முழுமையான அளவிலான பிராந்திய போரைத் தவிர்க்க இயன்ற அளவில் முயற்சி எடுத்து, தூதாண்மை வழிக்கு திரும்பி செல்ல வேண்டும் என்று இவ்வறிக்கையில் மீண்டும் அவசர வேண்டுகோள் விடுத்தார்.