இலங்கை முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பள்ளி சீருடை துணியை இலவசமாக வழங்க சீனா முடிவு
2024-11-06 18:48:01

2025ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்கள் அணியும், பள்ளி சீருடைகளுக்கான துணிகளை சீன அரசாங்கம் இலவசமாக வழங்கும் என்று இலங்கைக்கான சீன தூதர் ட்சி ஜென்  ஹோங் தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் உள்ள கெப்ட்டிபொல மகா வித்தியாலயா பள்ளியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய சீனத் தூதர் ட்சி ஜென்  ஹோங், 2023ம் ஆண்டு மற்றும் 2024 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி  மாணவர்களுக்கு பள்ளி சீருடைகளுக்கான துணியில் முறையே 70 சதவீதம் மற்றும் 80 சதவீதத்தை சீனா நன்கொடையாக வழங்கியதாக குறிப்பிட்டார்.

2025ம் ஆண்டில் சீனா நன்கொடையாக மொத்தம் 11.82 மில்லியன் மீட்டர் துணி வழங்க உள்ளதாக  ட்சி ஜென் ஹோங் தெரிவித்தார். இதன் மதிப்பு சுமார் 5.2 பில்லியன் ரூபாய்  ஆகும்.  இந்த துணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் கொழும்பை வந்தடையும் என்று அவர் கூறினார்.

மேலும் 2022 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து,  இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் உள்ள 7,900 பள்ளிகளில் 1.1 மில்லியன் மாணவர்களுக்கு சுமார் 6 மாத மதிய உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீனா 10,000 டன் அரிசியை நன்கொடையாக வழங்கியது என்று அவர் தெரிவித்தார்.