சீன இறக்குமதிக் கண்காட்சியில் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள்
2024-11-09 16:06:00

படம்: CFP

7ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிக் கண்காட்சி(சி.ஐ.ஐ.இ) தற்போது ஷாங்காயில் நடைபெற்று வருகிறது. கடந்த 6 கண்காட்சிகளில் கிட்டத்தட்ட 2500 புதிய தயாரிப்புகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய சேவைகள் பொதுவெளியில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாண்டின் சி.ஐ.ஐ.இ கண்காட்சியில் புதிய பொருள் என்ற கருப்பொருளைக் கொண்ட சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டது. மேலும், சீனா நாட்டளவில் அல்லது ஆசியா, உலகளவில் 400க்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் முதல்முறையாக பொதுவெளியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 7 ஆண்டுகளில், பல வெளிநாட்டு நிறுவனங்கள், சி.ஐ.ஐ.இ கண்காட்சியை, தங்களின் புதிய தயாரிப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும்  புதுமையான சேவை ஆகியவற்றை முதல்முறையாக அறிமுகப்படுத்துவதற்கான தளமாகப் பயன்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன?இந்த கண்காட்சியின் ஈர்ப்பாற்றல் என்ன?என கேள்விகள் எழுந்துள்ளன.

முதலாவதாக, சி.ஐ.ஐ.இ. கண்காட்சி என்பது, உலகளவில் இறக்குமதியை கருப்பொருளாக‌க் கொண்ட முதலாவது தேசிய நிலை கண்காட்சியாகும். இந்த கண்காட்சியின் தனித்துவமான பங்களிப்பு என்று கூறினால்,  புதிய தயாரிப்புகள், புதிய தொழில்நுட்பங்கள் வணிக ரீதியாக நடைமுறையில் இருப்பதற்கு நேரடித் தொடர்பை சி.ஐ.ஐ.இ. வழங்கி வருகிறது.

இரண்டாவதாக,  நுகர்வு தேவை என்ற கோணத்தில் பார்த்தால், 140 கோடி மக்கள் தொகையும் 40 கோடி நடுத்தர வருவாய் கொண்ட நுகர்வோரும் கொண்ட சீனச் சந்தை, உலகின் புதிய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு மாபெரும் வணிக வாய்ப்பை உருவாக்கி வருகிறது.

மூன்றாவதாக,  புத்தாக்கம் செய்தல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மீது சீன மக்கள் ஆர்வம் கொள்கின்றனர். குறிப்பாக, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அறிவியல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் தொழில் மாற்றம் போன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி, புத்தாக்கம் மூலம் வளர்ச்சியை மேம்படுத்தும் திட்டத்தை சீனா முனைப்புடன் செயல்படுத்தியுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் புத்தாக்கம் மேற்கொள்வதற்கான ஓர் வளமான தளத்தை சீனா வழங்கி வருகிறது.