சீன அரசுத் தலைவர்-பிரிட்டன் தலைமையமைச்சர் சந்திப்பு
2024-11-18 22:23:05

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 18ஆம் நாள் ரியோ டி ஜெனிரோவில் பிரிட்டன் தலைமையமைச்சர் ஸ்டார்மெருடன் சந்திப்பு நடத்தினார்.

இச்சந்திப்பின் போது ஷிச்சின்பிங் கூறுகையில், ஐ.நா பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடுகளாகவும், உலகின் முக்கிய நாடுகளாகவும் திகழும் சீனாவும் பிரிட்டனும் தத்தமது நாட்டின் வளர்ச்சியை முன்னேற்றுவதோடு, உலகளாவிய அறைகூவல்களைச் சமாளிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளன. இந்நிலையில் இரு தரப்பும் ஒன்றுக்கொன்று மதிப்பு, திறப்பு மற்றும் ஒத்துழைப்பு, பரிமாற்றம் மற்றும் பகிர்வு ஆகியவற்றில் ஊன்றி நின்று, பரஸ்பர நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவதை நனவாக்கி, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சிக்கான புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

பிரிட்டனுக்கும் சீனாவுக்கும் இடையேயான நீண்டகால வலிமைமிக்க உறவு, இரு நாடுகள் மற்றும் உலகிற்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்ட ஸ்டார்மெர், சீனாவுடன் இணைந்து பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, பொருளாதாரம், வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், நிதி மற்றும் நாணயம், சுகாதாரம் மற்றும் மருத்துவம், கல்வி, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது முதலிய துறைகளில் பரந்துபட்ட அளவில் ஒத்துழைப்பு மேற்கொள்ள பிரிட்டன் விரும்புவதாகவும் தெரிவித்தார்.