இலங்கைக்கு 200 மில்லியன் டாலர் நிதி உதவி – ஆசிய வளர்ச்சி வங்கி
2024-11-20 18:37:48

இலங்கை அந்நாட்டின் நிதித்துறையை வலுப்படுத்தும் வகையில் ஆசிய வளர்ச்சி வங்கியானது இலங்கைக்குக் கொள்கை அடிப்படையில் 200 மில்லியன் டாலர் தொகையை வழங்க செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கியானது தன்னுடைய இரண்டாவது கொள்கைத் திட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்கு முறையை மேம்படுத்தும் வகையிலும் அதன் நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையானது மேம்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை அமைப்பை உள்ளடக்கிய நிலையில், வங்கிகளின் பலவீனமான நடவடிக்கைகளைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்ய உதவும் என்று மணிலாவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கியின் கூற்றுப்படி, இலங்கை மத்திய வங்கியானது கடனளிப்பது தொடர்பான சிக்கல்கள் மற்றும் பணப்புழக்கம் சார்ந்த அழுத்தங்களைக் கண்காணிக்கப் புதிய சோதனை முறையைச் செயல்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது.