• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Tuesday    Apr 8th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-05 14:51:35    
'சீன-இந்திய நட்புறவு' தொடர்பான போட்டிக்கான கட்டுரை

cri

புவியியல் ரீதியாக, இமயமலை மற்றும் திபெத் பீடபூமி ஆகியவற்றால் சீனாவும் இந்தியாவும் தனித்தனியே பிரிக்கப்பட்டிருந்தாலும், கடந்த இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலான ஆழ்ந்த நட்பும், நல்ல புரிந்துணர்வும் இருந்து வருகின்றது. சுமார் 3500 கி.மீ. எல்லையுடைய அண்டை நாடுகளான சீனாவும் இந்தியாவும் மக்களின் ஆற்றலைத் திரட்டி ஏறக்குறைய சமகாலத்தில் விடுதலை அடைந்து, மக்களின் நலன் ஒன்றையே முழுமையான நோக்கமாகக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் வெற்றி நடைபோட்டு வருகின்றன. 1914 ஆம் ஆண்டிலேயே சீனாவும் இந்தியாவும் சிம்லா உடன்படிக்கையை உருவாக்கி, ஒத்துழைப்பிற்கு ஒரு நல்ல அடிப்படையை உருவாக்கின. சீனா விடுதலை அடைந்த போது, இந்தியா உடனே சீனாவை அங்கீகரித்தது, கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், ' இந்தி-சீன பாய் பாய்' என்ற முழக்கம் இந்தியா முழுதும் ஓங்கி ஒலித்து, சீன-இந்திய சகோதரர்களின் நட்புணர்வை உலகிற்கு பறைசாற்றியது.

சகோதரர்களிடையே அவ்வப்போது எழும் சிறுபிரச்னைகளைப் போல, இடையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும், 1962ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 20 ஆம் நாள் முதல் நவம்பர் திங்கள் 21 ஆம் நாள் வரை போர் நடைபெற்ற போதிலும் கசப்புணர்வு மறைந்து, நல்லுறவு மீண்டும் ஏற்படுத்தப்பட்டு, வரலாற்றின் சிறந்த காலக்கட்டத்தில் அது நுழைந்துள்ளது. இந்த முயற்சியில் இருதரப்பு தலைவர்களும் அயராது முனைப்புடன் பாடுபட்டுக் கொண்டேயிருந்தனர். 1954ம் ஆண்டு, அப்போதைய தலைமை அமைச்சர் திரு.ஜவகர்லால் நேருவின் சீனப் பயணத்திற்குப் பின் 1988ம் ஆண்டு டிசம்பர் திங்களில், அன்றைய இந்தியத் தலைமை அமைச்சர் திரு. இராஜீவ் காந்தி மேற்கொண்ட சீனப் பயணம், 1991 ஆம் ஆண்டில் சீனத் தலைமை அமைச்சர் திரு.லீ பெங் மேற்கொண்ட இந்தியப் பயணம், 1992 ஆம் ஆண்டின் மே திங்களில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரு.வெங்கட்ராமன் மேற்கொண்ட சீனப் பயணம், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் திரு.சரத்பவார் 1992ம் ஆண்டில் மேற்கொண்ட சீனப் பயணம் ஆகியவற்றால், நல்லுறவு படிப்படியாகயும், நிதானமாகவும் மீட்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டின் டிசம்பர் திங்களில் மும்பை நகரிலும், 1993 ஆம் ஆண்டின் சூன் திங்களில் ஷாங்காய் நகரிலும் துணை நிலை தூதரகங்கள் நிறுவப்பட்டு, இரு நாடுகளிடையே இருந்த இறுக்கம் தளர்ந்து இணக்கமான சூழ்நிலை உருவாக்கப்பட்டது. இவ்வுறவு இருநாடுகளின் தலைவர்களின் விருப்பமாக மட்டுமல்ல, தற்போது, இரு நாடுகளின் 200 கோடிக்கும் அதிகமான மக்களின் ஆழ்ந்த, அசைக்க முடியாத விருப்பமாகிவிட்டது.

இனி, இரு நாடுகளிடையே எந்த வகையிலான நட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில், மக்கள்தொகை, புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு போன்றவற்றில் ஒற்றுமையுள்ள இருநாடுகளுக்கும் இடையே , பொருளாதார மற்றும் வர்த்தகத் துறையில் அளவற்ற வாய்ப்புக்கள் உள்ளன. கடந்த 18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவும் சீனாவும் உலகின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் சுமார் 57 விழுக்காட்டை வகித்தன. ஒன்றின் தேவையை மற்றது நிறைவு செய்யும் வகையில் வர்த்தக அளவு மேலும் விரிவாக்கப்பட்டால் முந்தைய நிலையை விரைவில் கொண்டு வரலாம். பண்டைய பட்டுப்பாதையில் இடம்பெற்றிருந்த நாதுல்லா கணவாய், அண்மையில் மீண்டும் வர்த்தகத்திற்காக திறந்து வைக்கப் பட்டிருப்பதன் மூலம் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பல ஆண்டுக் காலமாக மூடிவைக்கப்பட்டு, 1962 ஆம் ஆண்டிற்குப் பின் திபெத்தியர்களின் வாராந்திர அஞ்சல் பட்டுவாடாவுக்கு மட்டுமே திறக்கப்பட்ட நாதுல்லா கணவாய் இப்போது நிரந்தரமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, பண்டைக்கால வர்த்தக வாயில்கள் பலவற்றை இருநாடுகளும் திறந்து வைக்க வேண்டும். கடந்த நூற்றாண்டு வரை, சீனப் பொருளை பயன்படுத்தாத இந்தியர்களே இல்லை என்ற நிலை இருந்தது. எனது தாத்தா காலத்தில் சீனாக் கற்கண்டு, சீனப் பட்டாசு போன்றவை எல்லாக் கடைகளிலும் கிடைத்தன. ஆனால் தற்போது, மின்னணுவியல் தொடர்பான சீனப் பொருட்களே அதிகம் இந்திய சந்தைகளில் கிடைக்கின்றன. இந்நிலையை மாற்றி அனைத்து இரகப் பொருட்களும் இந்தியச் சந்தையில் கிடைக்கவும் அவற்றுக்கு இணையாக இந்தியப் பொருட்களும் சீனாவில் கிடைக்கவும் இருதரப்புக்களும் பாடுபட வேண்டும். உலக வர்த்தக அமைப்பில் வளரும் நாடுகளின் முக்கியப் பிரதிநிதிகளான சீனாவும் இந்தியாவும் வளரும் நாடுகளின் நலனுக்கு ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டும். தோகா சுற்றுப் பேச்சு வார்த்தைக்குப் பின், உலக பொருளாதார அமைப்பு நாடுகளிடையே இன்னும் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. எனவே இந்த நட்புறவு ஆண்டில் சீனாவும் இந்தியாவும் நெருக்கமாக ஒத்துழைத்து உலக வர்த்தக அமைப்பு உருவாக்கிய இலக்கின் வெற்றிக்குப் பாடுபடுவதோடு மட்டுமின்றி, உலகப் பொருளாதார வளர்ச்சியின் குவிமையங்களாக மாற வேண்டும். 2020ம் ஆண்டில் உலகின் இரண்டு மாபெரும் பொருளாதார வல்லரசுகளாக சீனாவும் இந்தியாவும் மாறும் என பல்வேறு உலக அமைப்புக்கள் ஆருடம் கூறியுள்ளன. நம்மிரு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தினால், இலக்கிற்கு முன்னரே சாதனையை படைக்க முடியும்.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040