• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-05 14:51:35    
'சீன-இந்திய நட்புறவு' தொடர்பான போட்டிக்கான கட்டுரை

cri

அரசியல் துறையில்

மக்கள் தொகையை அதிகமாகக் கொண்டிருக்கும் சீனாவும் இந்தியாவும் ஏறக்குறைய ஒரே மாதிரியான அரசியல் நிலைமையை கடந்த காலங்களில்

கொண்டிருந்தன. ஒரே காலக்கட்டத்தில், மக்களின் ஆற்றலைத் திரட்டி இரண்டு நாடுகளும் விடுதலை பெற்றதோடு மக்களின் நலனையே முக்கிய இலக்காகக் கொண்டு, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பெரிதும் பாடுபட்டு வருகின்றன. உலக நலனுக்கு அச்சுறுத்தலாக இருந்த பனிப்போர், கடந்த நூற்றாண்டிலேயே முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் இந்தியாவும் சீனாவும் நெருங்கி ஒத்துழைத்தால் உலக அரசியலில் முக்கிய இடம் வகிக்கலாம். இந்தியா-சீனா-ரஷ்யா முத்தரப்பு ஒத்துழைப்பு பற்றி அவ்வப்போது குரல் எழுப்பப்படுகிறது. எனவே மூன்று நாடுகளிடையேயும் நெருங்கிய கூட்டாளி உறவை ஏற்படுத்தவும் பாடுபடலாம். உலகின் மிகப்பெரிய சனநாயக நாடான இந்தியாவுக்கு, ஐ.நா.வின் பாதுகாப்பவையில் நிரந்தர இடம் இன்னும் கிடைக்கவில்லை. பாதுகாப்பு அவையில் வளரும் நாடுகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லாத நிலை, கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் நிலை கிடைக்க சீனா உள்ளார்ந்த முழு ஆதரவை தெரிவிக்க வேண்டும். ஜப்பான் போன்ற நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக மாறினால், சீனாவுக்கு வேண்டாத சில பின் விளைவுகள் ஏற்படக்கூடும். எனவே, பண்டைக்கால நண்பனான இந்தியாவுக்கு சீனா முழுமையான ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். மேலும், ஐ.நா.வின் தலைமைச் செயலர் பதவியில் ஆசியர் ஒருவர் பணியாற்றி நீண்டகாலம் ஆவிட்டது. தற்போது இந்தியர் ஒருவர் இப்பதவிக்கு போட்டியிடும் நிலையில், சீனா தனது முழு ஆதரவை தெரிவித்தால் இந்தியர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். மேலும் 45 உறுப்புநாடுகளைக் கொண்டிருக்கும் உலக அணு ஆற்றல் அமைப்பில் இந்தியாவுக்கு இதுவரையில் இடம் இல்லை. தனது அணுஆற்றலை வெளிக்காட்டி, உலகின் 6வது அணு வல்லரசாக மாறிய இந்தியாவுக்கு, இவ்வமைப்பில் இடம் இல்லை என்பது முரண்பாடாக உள்ளது. இவ்வமைப்பில் இந்தியா சேருவதற்கு அமெரிக்கா எப்போதும் தடையாக உள்ளது. இந்நிலையை மாற்ற சீனா தனது நட்புக் கரத்தை நீட்ட வேண்டும். இதுபோன்ற நட்பு நடவடிக்கைகள், சீனாவும் இந்தியாவுக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தெற்காசிய ஒத்துழைப்பு நாடுகள் கூட்டமைப்பில் சீனா சேரவும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா சேரவும் இரு நாடுகளும் கூட்டு முயற்சிகளை எடுக்க வேண்டும். இதன் மூலம் பன்முகப் பரிமாற்றம் வலுப்பட்டு, நல்லுறவு மேலும் வளர ஏதுவாகும். வட்டார ஒத்துழைப்பு உலகளாவிய ஒத்துழைப்புக்கு ஆணிவேராக அமையும். வேளாண் துறையில் அதிக மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் சீனாவும் இந்தியாவும் வேளாண் துறையில் அயராது பாடுபட்டு, மக்களின் உணவுத் தேவையை முழுமையாக நிறைவு செய்துள்ளன. இந்நிலையில் பயிர் உற்பத்தி, தோட்டக்கலை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நோய்க் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம், வீரிய இரக விதை உற்பத்தி, பயனற்ற நிலத்தை உபயோகப்படுத்துதல் பாலைவனமயமாக்க தடுப்புப் பணி போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். பொதுவாக, சீன விவசாயிகள் வசதி படைத்தவர்களாகவும், இந்திய விவசாயிகள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவும் இருக்கின்றனர். இந்நிலையை மாற்ற, சீனா தனது பட்டறிவை இந்தியாவுக்கு கற்றுத் தர வேண்டும்.

இவ்வாண்டின் மார்ச் திங்கள் 27 ஆம் நாள், சீன வேளாண் துறை அமைச்சர் திரு. Du Qinglin தலைமையிலான சீனப் பிரதிநிதிக் குழு இந்தியாவுக்கு வருகை தந்தபோது துணை அமைச்சர் நிலையிலான இரு தரப்புக் குழுக்களும், இரண்டு

ஆண்டுகளுக்கு ஒரு முறை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இருதரப்புக்களும் நெருங்கிய

தொடர்பு கொண்டு வேளாண் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம், நட்புறவை மேலும் விரிவாக்க முடியும்.

பாதுகாப்பில்

கடந்த காலங்களில் சீனாவும் இந்தியாவும் மேலை நாடுகளின் சுரண்டலுக்குட்பட்டு, தனது செல்வத்தை மட்டுமல்ல, செல்வாக்கையும் இழந்தன. விடுதலைக்குப் பின்னர், அயராத முயற்சிகள் மூலம் இரு நாடுகளும் தற்போது பொருளாதார வல்லரசுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. தற்போது ஒன்றுக்கொன்று அச்சுறுத்தல் என்ற வார்த்தை பொருளற்றதாக மாறிவிட்ட நிலையில், பாதுகாப்புத் துறையில் இருநாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. அக்ஷாய் சின் மற்றும் அருணாசலப் பிரதேசம் போன்றவை நெருடல்களி இருந்தாலும், அவை தொடர்பான பிரச்னைகள் எதிர்காலத்தில் நட்புடன் மறக்கப்படும் நிலை ஏற்படக்கூடும். பண்டைக்காலத்தில் இந்தியாவின் கெளடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்ற நூலும், சீனாவின் பண்டைக்கால நூலான Bingfa என்ற நூலும்,போர்க்கலை பற்றியும், நாட்டைப் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு என்பது பற்றியும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கருத்துக்களை தெரிவிக்கின்றன. இவ்விரு நூல்களும் பண்டைக் காலத்திலேயே பாதுகாப்பு பற்றி இருநாடுகளும் ஒத்த சிந்தனையைக் கொண்டிருந்ததை வெளிக்காட்டுகின்றன. தற்போது கூட பெய்ஜிங்கில், இருநாடுகளின் எல்லைப் பிரச்னை தொடர்பான எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதுபோன்ற பலசுற்றுப் பேச்சுவார்த்தை மூலம், நுண்ணுணர்வுப் பிரச்னைகள் யாவும் தீர்க்கப்படும் என நம்புகின்றேன். இருநாடுகளின் இராணுவமும் இணைந்து கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ளும் என இந்த வாரத்தில் இந்திய இராணுவத் தளபதி திரு.ஜெ.ஜெ.சிங் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பயிற்சிகளும் இருதரப்பு உறவை வளர்க்கும் என்பதால், தொடர்ந்து இவற்றை நடத்த வேண்டும். மேலும், தேவையற்ற வீண்செலவைக் குறைக்க இருநாடுகளும் எல்லையோரத்தில் உள்ள ராணுவப் படைகளை, பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் குறைக்கலாம். இது போன்ற நடவடிக்கைகள் மூலம் பண்டைக்கால ஒற்றுமையை தற்போதும் நிலைநிறுத்தி பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளும் தங்களது ஒத்துழைப்பை வலுப்படுத்தலாம்.

1 2 3 4 5