• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சி அஞ்சலகம்
  2010-03-22 15:47:08  cri எழுத்தின் அளவு:  A A A   








உலகப் பொருட்காட்சி அஞ்சலகம்

2010 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி எதிர்வரும் மே திங்கள் முதல் நாள் தொடக்கம் அக்டோபர் திங்கள் 31ம் நாள் நடைபெறவுள்ளது. பலவித புதுமைகளுடம் உலகை அதிசயிக்க வைக்கும் வகையில் சீனா உரிய முன்னேற்பாடுகளை மும்முரமாக செய்துகொண்டிருக்கிறது. கடந்த வியாழனன்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அரங்குக்கு அருகே சிறப்பு அஞ்சலகமொன்றை ஷாங்காய் அஞ்சல் துறை திறந்துள்ளது. உலகப் பொருட்காட்சிக் காலத்தில் காலை 7 மணி முதல் நள்ளிரவு 12 வரை திறந்திருக்கும் இந்த அஞ்சலகத்தின் சிறப்பு என்னவென்றால், உலகப் பொருட்காட்சியினுள்ளே எங்கே வேண்டுமானாலும் நிழற்படத்தை எடுத்துக்கொண்டு, அதை பொருட்காட்சி அரங்கினுள் உள்ள ஏதேனும் ஒரு ஷாங்காய் அஞ்சல்துறையின் சேவை நிலையத்திடம் ஒப்படைத்துவிட்டால் போதும். பொறுமையாக அரங்கை சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே புதிதாக திறக்கப்பட்டுள்ள அஞ்சலகத்துக்குள் சென்று, தங்களது நிழற்படங்களை தாங்கிய அஞ்சலட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும். நிழற்படங்கள் நினைவுச்சின்னங்கள் என்பது நமக்கு தெரியும், அதை நம் நெருங்கிய சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் அஞ்சலட்டையாக அனுப்பினால் மகிழ்ச்சி கூடாதா என்ன?

போக்குவரத்துத் தடை

ஏற்கனவே மலர்ச்சோலை நிகழ்ச்சியில் பெய்ஜிங் மாநகரின் போகுவரத்து நெரிசல், உயர்ந்து வரும் தனியார் சீருந்துகளின் எண்ணிக்கை, போக்குவரத்து நெரிசலை குறைக்க மேற்கொள்ளப்படும், தனியார் வண்டிகள் வாரமொரு நாள் தடை, சீருந்து நிறுத்தக் கட்டணம் என பல விபரங்களை கேட்டிருப்பீர்கள். ஒலிம்பிக்கின் போது நடைமுறைக்கு வந்த தனியார் வண்டிகள் வாரத்தில் ஒருநாள் ஓடத்தடை நடவடிக்கை, ஒலிம்பிக்கை தாண்டி தொடர்ந்தது. இனியும் தொடரும் என்றுதான் மாநகராட்சியினர் கூறுகின்றனர். வண்டி எண்ணின் கடைசி எண்ணை வைத்து வாரம் ஒரு நாள் குறிப்பிட்ட சில எண்கள் ஓடக்கூடாது என்ற தடை நடைமுறையில் உள்ளதால் மாநகரிலுள்ள 42 லட்சம் சீருந்துகளில் நாள்தோறும் 8 லட்சம் சீருந்துகள் ஓடாமல் தடுக்கப்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் குறைகிறது, சுற்றுச்சூழலுக்கும் நன்மை கிடைக்கிறது. ஆக இந்த சீருந்துக்கான ஒருநாள் தடை நடவடிக்கை தொடர்வதோடு, அலுவலகப் பணி நேரத்திலும் சில மாற்றங்கள் செய்து, வண்டி நிறுத்திமிடங்களின் கட்டணைத்தை உயர்த்தி, வண்டியின் மாசு வெளியேற்ற கட்டுப்பாட்டை கடுமையாக்கி, பொதுப்போக்குவரத்து வசதிகளை மக்கள் நாடச் செய்ய, அவற்றை மேலும் சீர்படுத்த மாநகராட்சி முயற்சி செய்து வருகிறது. மிதிவண்டிகளுக்கு பெயர் போன பெய்ஜிங்கில் மீண்டும் மிதிவண்டிகளின் எண்ணிக்கை உயர இந்த நடவடிக்கைகள் நிச்சயம் உதவும்.

வீடிருந்தால் உறவு

நம்மூரில் பொதுவாக திருமணம் என்றால் மாப்பிள்ளை வீட்டார்தான், பெண்ணுக்கு என்ன செய்வீர்கள், மாப்பிள்ளைக்கு என்ன செய்வீர்கள் என்று கேள்விகள் கேட்பர். பல மாப்பிள்ளைகள் மாமியார் வீட்டு சீதனத்திலேயே புதிய வேலை, புதிய வண்டி என்று அமர்க்களப்படுத்துவர். இங்கே சீனாவில், கதை தலைகீழ். பெற்றோரின் சம்மதம் பெறச் சென்றால், தங்கள் பெண் விரும்பும் அவளது காதலன், தன் மகளை எந்த அளவுக்கு விரும்புகிறான் என்பதை அறிவதோடு, ஆசி கூறிவிடுவதில்லை. பெரும்பாலான மாமியார்கள் தங்கள் மாப்பிள்ளைக்கு சொந்தமாக வீடு இருக்கிறதா என்பதை முக்கிய ஒரு தகுநிலைப் புள்ளியாக, ஏன் தகுதியாகவே வைத்துள்ளனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று சீனாவில், 18 விழுக்காட்டுப் பெண்கள்தான், தங்கள் மகளை மணமுடிக்க விரும்பும் ஆண், அதாவது வருங்கால மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இல்லையென்றால் சிக்கலில்லை, வாடகை வீடு இருந்தால் போதும் என்றுள்ளனர். 82 விழுக்காட்டு மாமியார்கள், வருங்கால மாப்பிள்ளைகளுக்கு சொந்தமாக வீடு, சொத்து இருக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். இந்த ஆய்வு பெய்ஜிங், ஷாங்காய், தியென்ஜின், நான்ஜிங், ஹாங்ஷோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டது. நகரங்களில் கொஞ்சம் வசதியான வீட்டின் வாடகையே தலை சுற்றவைக்கும். இந்நிலையில் சொந்தமாக வீடு இல்லையென்றால்? நம்மூரில் முதிர்கண்ணிகள் போல், முதிர்கண்ணர்கள்தான். வேடிக்கையாக இதைச் சொன்னாலும், ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. இன்றைக்கும் தாய்மார்கள், திருமணம் என்று வரும்போது மகளின் வாழ்க்கைத் துணையை முடிவு செய்வதில் முக்கிய செல்வாக்கு வாய்ந்து பங்கு வகிக்கின்றனர். ஒருவேளை மகளின் தொல்லை காரணமாக ஒப்புக்கொள்ளக்கூடும் என்றாலும், மாப்பிள்ளை என்ற மதிப்புடன் நடைபோட, சொந்தமாக வீடு இருக்கவேண்டும், ஒப்புதல் கேட்டு பெண்ணின் வீட்டுக்கு போவதற்கு முன்.

கரும்பில்லை இனிக்கும்

செயற்கை இனிபூட்டிகளை பற்றி நமக்கு தெரியும். அந்தக் காலத்திலேயே, பாவ் பாவ் என்று பேருந்து ஹார்ன் போல் ஒலியெழுப்பி விற்ற குச்சி ஐஸின் இனிப்பில் பலவேலை சாக்கரின் எனும் செய்ற்கை இனிப்பூட்டி பயன்படுத்தப்பட்டிருக்கும். பல இனிப்பகங்கள் கூட அந்தக்காலத்தில், கருப்பட்டி வெல்லம், சீன சர்க்கரைக்கு பதிலாக சாக்கரினை பயன்படுத்தியதாக கூறுவார்கள். இன்றைக்கு சாக்கரினுக்கு தாத்தா போல இன்னும் பல செயற்கை இன்ப்பூட்டிகள் கிடைக்கின்றன. ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்கள். அதுபோல ஸ்டீவியா ரெபவ்டியானா பெர்ட்டோனி எனும் தாவரத்தில் இலையிலிருந்தும் வெல்லம் போல், சர்க்கரை போல் இனிக்கும் பொருளை எடுப்பர். இதற்கு இந்த தாவரத்தின் பெயரைப் போலவே ஸ்டீவியா என்ற பெயரில் குறிப்பிடுவர். அண்மையில் இந்த ஸ்டீவியா ரெபவ்டியானா பெர்ட்டோனி தாவரத்தின் புதியதோர் இனத்தை வடகொரிய வேளாண் ஆய்வாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனராம். சர்க்கரை அளவு அதிகமுடைய இந்த ஸ்டீவியாவை, நீரிழிவு நோய், வயிற்றுவலி, செரிமானமின்மை, சிறுநீரக அழற்சி போன்ற நோய் உள்ளவர்களும் உட்கொள்ளலாம், பாதிப்பில்லை.

விதைக் களஞ்சியம்

உலகம் திடீரென் மாபெரும் இயற்கை பேரிடர்களுக்கு முகங்கொடுக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இல்லை, மீண்டும் உலகப் போர் மூண்டு, மனிதன் தன் அறிவை பயன்படுத்தி உருவாக்கிய நாசகார ஆயுதங்கள் எல்லாம் கூர்தீட்டிப் பார்க்கப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். மனித உயிர்களை விடுங்கள், அவனுடைய மதிநுட்பமோ, கெடுமதியோ, ஒரு சிலராவது எங்கேயாவது ஒளிந்து, பதுங்கி தப்பிவிடுவார்கள். ஆனால், எத்தனை நாளுக்கு. அழிவுக்கு பிறகு மீண்டும் வெளியே வந்து மனிதன் இயற்கையை மீண்டும் செழிப்பாக்க வேண்டாமா?? இந்த எண்ணத்திலோ அல்லது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கட்டுமே என்ற எண்ணத்திலோ, ஏற்கனவே உலகில் பல பகுதிகளில் 1400 சிறப்பு வைதை வங்கிகள் இருக்கின்றன. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு, வடதுருவத்திலிருந்து 1000 கிமீ தொலைவில், நார்வேயேவை ஒட்டிய தீவுக்கூட்டத்தில், ஒரு விதைக்கிடங்கு இருக்கிறது. கிடங்கு என்பதை விட பாதுகாப்புப் பெட்டகம் என்றுதான் சொல்லவேண்டும். இன்றைக்கு ஈராண்டுகள் உருண்டோடிய நிலையில் இந்த மாபெரும் விதைப் பெட்டக் கிடங்கில் 5 லட்சம் தாவர இனங்களில் விதைகள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து சேர்க்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040