சீனாவின் பாரம்பரிய விசிறி, உலகளவில் புகழ்பெற்ற கலைப் பொருளாகும். உலகப் பொருட்காட்சிப் பூங்கா வடிவமைப்பு, இந்தப் பாரம்பரிய விசிறியால் தூண்டப்பட்டதாகும். உலகப் பொருட்காட்சி நடக்கின்ற இடத்தின் மையக் காட்சியாக இருக்கின்ற இந்தப் பூங்கா, பெரிய ரக பசுமையான சீன விசிறியைப் போன்ற அழகான காட்சியை அளிக்கிறது. இது பற்றி, இப்பூங்காவின் சீன தரப்பின் முதன்மை வடிவமைப்பாளர் யூ சியுவான் கூறியதாவது:
உலகப் பொருட்காட்சி நடைபெறும் போது, ஷாங்காயில் உயர்வான வெப்பநிலை நிலவும் காலமாகும். இதைச் சமாளிக்க, தகுந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, இத்தகைய வடிவமைப்பில் உலகப் பொருட்காட்சிப் பூங்காவை உருவாக்க முடிவு செய்தோம். விசிறி வடிவில் கட்டியமைக்கப்பட்ட இந்தப் பூங்காவில், காற்றோட்டம் அதிகமாக இருப்பதால், வெப்பம் குறைந்தே இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
உலகப் பொருட்காட்சிப் பூங்காவில், சுமார் 50 வகைகளைச் சேர்ந்த 3700 தாவரங்கள் சதுர வடிவத்தில் வரிசையாக நடப்பட்டுள்ளன. அவை, சில ஆண்டுகளுக்கு முன்பு, ஷாங்காயின் நகரப்புறத்திலுள்ள தாவரத் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவை.
சில்லென்ற காற்று உடலை வருட உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் நடகின்ற போது, உலகப் பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் சுற்றுப்புறத்தில் உள்ளதை விட பங்காவிலுள்ள வெப்பநிலை குறைவாக இருப்பதை உணரலாம். இப்பூங்காவில் நீரை உறிஞ்சு கொள்ளும் சிறப்பு நடைபாதைகள் போடப்பட்டுள்ளன. காற்றோட்டம் தரக் கூடிய செலவு குறைவான கட்டிட மூலப்பொருட்களைப் பயன்படுத்தியதால், தரையின் மேலும் கீழும் வெப்பம் தெரிவதில்லை என்று யூ ச்சியுவான் அறிமுகப்படுத்தினார். மேலும், இப்பூங்காவிலுள்ள செயற்கையாக ஈரப்பத வசதிகள், கோடைக்காலத்தில் வெப்பத்தைக் குறைப்பதற்குத் துணைபுரியும்.
ஈரப்பத தொழில் நுட்பம், மூலவள ரக உயிரி முறை ஆகியவை, இப்பூங்காவில் பயன்படுத்தப்பட்ட 7 புதிய உயிரின தொழில் நுட்பங்களில் இரண்டாகும். புதிய தொழில் நுட்பத்தின் பயன்பாட்டைக் குறிப்பிடுகையில், இயற்கை நீர் சுத்திகரிப்பு வசதிகள் குறிப்பிட்டத்தக்கவை. இது குறித்து யூச்சியுவான் கூறியதாவது:
உலகப் பொருட்காட்சிப் பூங்காவின் அருகில், இயற்கையான சதுப்பு நிலம் நிறைந்த ஹோதான் பூங்கா அமைந்துள்ளது. 14 ஹெக்டே பரப்பளவான இந்தச் சதுப்பு நிலப் பூங்கா, ஷாங்காய் மாநகரில் ஒரேயொரு சதுப்பு நில உயிரின சூழலாக மாறும். ஹோதான் பூங்காவில், காய்கறிகள், மக்காசோளம், நெல் முதலிய பயிர்களை மக்கள் பார்க்கலாம். அதேவேளை, இந்தப் பூங்கா, ஹுவாங்பூ ஆற்று நீரை தூய்மைப்படுத்தும் வசதியாகவும் அமைக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பணியகத்தின் பசுமை நிலப் பூங்கா விவகாரங்களுக்குப் பொறுப்பான திரு சுன்சூ எமது செய்தியாளரிடம் இதை அறிமுகப்படுத்தினார்.
இயற்கைக் காட்சிகளைத் தவிர, உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் சிறப்பான மரப் பாலம் காணப்படுகிறது. இது, வானில் பிறைவடிவ தொங்குபாலமாகவுள்ளது. பார்வையாளர்கள் இப்பாலத்தில் ஏறிநின்று, வேறுபட்ட கோணங்களில் வேறுபட்ட காட்சிகளைக் கண்டுகளிப்பார்கள்.
உலகப் பொருட்காட்சி நடைபெறுமிடத்தில் உலகின் பல்வேறு இடங்களின் கட்டிடக்கலைப் படைப்புகள் காணப்படுகின்றன. மேலும், மர நிழலில் அமர்ந்து, தாவரங்களையும் ஹுவாங்பூ ஆற்றில் வந்து போகும் கப்பல்களையும் பார்த்து ரசிக்கலாம். மூன்று ஆண்டுகளுக்கு முன், இங்கு, அதிக தொழிற்சாலைகளும் துறைமுக தங்குதளங்களும் இருந்தன. எரியாற்றல் செலவு அதிகமான, கன ரக சாதனங்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் தற்போது, இங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை என்ற நடப்பு உலகப் பொருட்காட்சியின் தலைப்புக்கு ஏற்றதாக, இச்செயல்பாடு இருக்கிறது. இங்கு, வரலாற்று பதிவுகளைக் கொண்ட தொழிற்துறை சிதிலங்களையும் காணலாம். ஷாங்காய் மாநகரத்தின் பூங்கா பசுமைமயமாக்க கட்டுமான தொழில் நிறுவனத்தின் துணைத் தலைவர் யுவான் சாவ் கூறியதாவது:
தொழிற்சாலைகளின் சில கட்டிடங்கள், இயந்திரங்கள் முதலியவை, சிற்ப கலைப் படைப்புகளாக சீர்திருத்தப்பட்டு, பூங்காவில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
மூன்று ஆண்டுகால முயற்சிகளின் மூலம், உலகப் பொருட்காட்சிப் பூங்கா, முழுமையாக கட்டியமைக்கப்பட்டுள்ளது. இது, ஏப்ரல் திங்களில் சோதனை முறையில் திறக்கப்பட்டு, பயணிகளை வரவேற்கும். ஷாங்காய் மாநகரத்தின் பூங்கா பசுமைமயமாக்க கட்டுமான தொழில் நிறுவனத்தின் துணைத் தலைவர் யுவான் சாவ் அறிமுகப்படுத்தியதாவது:
இப்பூங்கா கட்டியமைக்கப்பட்ட பிறகு, வண்ணத்துப்பூச்சி, அணில், பறவைகள், ஆமை உள்ளிட்ட விலங்குகள் படிப்படியாக வர தொடங்கியுள்ளன. இது, ஈர்ப்பாற்றல் மிக்கது. இந்தப் பூங்கா எங்கும் உயிராற்றல் நிறைந்துள்ளதை, இதன் மூலம் உணர்ந்துகொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், உலகப் பொருட்காட்சி நிறைவடைந்த பின், ஷாங்காய் மாநகரிலுள்ள இந்த மிக பெரிய பூங்காவை, நகரவாசிகளும் பயணிகளும் இலவசமாக பார்வையிடலாம் என்று தெரிகிறது.