
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து, ஜெர்மனி்யிலுள்ள சீனத் தூதரகத்தின் விசா பிரிவுக்குச் சென்று சீன விசா விண்ணப்பம் செய்யும் மக்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளின் இதே காலத்தில் இருந்ததை விட பெரிதும் அதிகரித்தது. மிக அதிகமாக, ஒரு நாளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட விண்ணபங்கள் இப்பிரிவில் சமர்பிக்கப்பட்டது.
ஜெர்மனியிலுள்ள சீனத் தூதரகத்தின் துணை நிலை தூதகர விசா பிரிவுத் தலைவர் Tang Wenjuan அம்மையார் கூறியதாவது—
"உலகப் பொருட்காட்சி விரைவில் துவங்கும். இதற்காக சீன விசா விண்ணப்பம் செய்யும் மக்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது. இவ்வாண்டின் முதல் காலாண்டில் எங்கள் பிரிவுக்கு வந்து விண்ணப்பம் செய்த மக்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை எட்டியது. இதன் மூலம் உலகப் பொருட்காட்சியில் இம்மக்கள் காட்டும் ஆர்வத்தை தெளிவாக உணர்ந்து கொண்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.
உலகப் பொருட்காட்சியை நடத்த விண்ணப்பம் செய்த போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவும், இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ள விசா பெறுவதற்கு வசதி வழங்கவும், உலகப் பொருட்காட்சி நடைபெறும் போது சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டவர் விசா பெறுவதில் பல சீர்திருத்தங்களை சீன அரசு செய்துள்ளது. எடுத்துக்காட்டாக, வெளிநாட்டுப் பயணியர் விசாவின் காலக்கெடு 3 முதல் 6 மடங்காக நீட்டிக்கப்படுகிறது.
அதேவேளையில், ஜெர்மனி சுற்றுலா நிறுவனங்களின் வியாபாரம் விறுவிறுப்பாகியுள்ளது.
TAICO சுற்றுலா மற்றும் வர்த்தக நிறுவனத்தில் பணிபுரியும் Stefan Knoll சீனாவுடன் நெருக்கமான தொடர்புடைவர் ஆவார். சீன மங்கையை அவர் திருமணம் செய்துள்ளார். தாய்நாட்டை அறிந்துள்ள அறிவுக்கு சமமாக சீனா பற்றி தெரிந்து வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது—
"உலகப் பொருட்காட்சி வழங்கும் நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி, ஜெர்மனி-சீன பொருளாதார மற்றும் வர்த்தகத் தொடர்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றேன். இது சீனா மீதான மேலதிகமான வணிகர்களின் ஆர்வத்தை தூண்டும் அதேவேளையில், இருநாடுகளுக்கிடை பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் முன்னேற்றும். சீனா பற்றி ஜெர்மனி மக்கள் மேலும் அறிந்து கொள்வதற்கும் இது துணைபுரியும்" என்று அவர் கூறினார்.